Published : 23 Nov 2021 03:06 AM
Last Updated : 23 Nov 2021 03:06 AM

உள்நாட்டிலேயே 5-ம் தலைமுறை : போர் விமானம் தயாரிக்கும் திட்டம் : அடுத்த ஆண்டு தொடங்க அரசு முடிவு

இந்தியாவிலேயே 5-ம் தலைமுறை அதிநவீன போர் விமானங்களைத் தயாரிக்கும் திட்டத்தை அடுத்த ஆண்டு தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்திய விமானப் படையில் பிரான்சிடம் வாங்கும் ரஃபேல் போர் விமானங்கள் படிப்படியாக சேர்க்கப்பட்டு வருகின்றன. மேலும், முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் ரக போர் விமானங்கள் உள்ளன. அந்த விமானங்களை மேம்படுத்தி புதிய தேஜாஸ் விமானங்களை தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், 5-ம் தலைமுறை தொழில்நுட்பங்களுடன் கூடியபோர் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது. விமானப் படைக்கு பெரும் பலம் சேர்க்க கூடிய மேம்படுத்தப்பட்ட நடுத்தர போர் விமானம் (ஏஎம்சிஏ) தயாரிக்கும் திட்டம், பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுக்கு விரைவில் அனுப்பி ஒப்புதல் பெறப்பட உள்ளது. அதற்கு முன்பு மத்திய பாதுகாப்புத் துறை மற்றும் நிதித் துறை அமைச்சகங்களிடம் ஆலோசனை நடத்தப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் மிகவும் சிக்கலானது. மேலும், அதிக செலவாகும். இதுபோன்ற விமானங்கள் சர்வதேச அளவில் அமெரிக்கா (எப்/ஏ-22 ரேப்டர் மற்றும் எப்-35), சீனா (செங்க்டு ஜே-20), ரஷ்யா (சுகோய்-57) ஆகிய நாடுகளிடம் மட்டுமே உள்ளன.

எனினும், சீனாவிடம் உள்ள ஜே-20 மற்றும் ரஷ்யாவின் சுகோய் ரக போர் விமானம் 5-ம் தலைமுறைக்கு சற்று குறைந்தவை என்கின்றனர். இந்நிலையில், இந்தியாவும் 5-ம் தலைமுறை போர் விமானத்தை தயாரிக்கும் திட்டத்தில் இறங்குகிறது. இந்தத் திட்டத்துக்கு ரூ.15,000 கோடி செலவாகும் என்று கணக்கிடப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x