Published : 14 Oct 2021 05:54 AM
Last Updated : 14 Oct 2021 05:54 AM

காந்தியின் ஆலோசனைப்படி சாவர்க்கர் கருணை மனு : பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

புதுடெல்லி

மகாத்மா காந்தியின் ஆலோசனைப்படியே பிரிட்டிஷாருக்கு வீர சாவர்க்கர் கருணை மனு அனுப்பினார் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில், இதுகுறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

இந்திய வரலாற்றின் ஒரு அடையாளமாக வீர சாவர்க்கர் திகழ்ந்தார். வருங்காலத்திலும் அவர் அவ்வாறு திகழ்வார். அவரைப் பற்றி கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் அவரை தாழ்ந்தவராக பார்ப்பது ஏற்புடையது அல்ல. அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் தீவிர தேசியவாதி ஆவர். ஆனால் அவரை ஒரு பாசிஸ்ட் என மார்க்சிஸ்ட் மற்றும் லெனினிஸ்ட் சித்தாந்தத்தை பின்பற்றுவோர் குற்றம் சாட்டுகின்றனர். சாவர்க்கர் மீதான வெறுப்பு நியாயமற்றது.

நாட்டின் சுதந்திரத்துக்கான அவரது அர்ப்பணிப்பு மிகவும் வலுவானது. பிரிட்டிஷ் அரசு அவருக்கு இரண்டு முறை ஆயுள் தண்டனை விதித்தது. சாவர்க்கரை பற்றிய பொய்கள் மீண்டும் மீண்டும் பரப்பப்பட்டன. சிறையில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி அவர் பிரிட்டிஷ் அரசிடம் கருணை மனுக்களை தாக்கல் செய்தார் என தகவல் பரவியது. கருணை மனுக்களை தாக்கல் செய்யும்படி காந்திதான் அவரிடம் கூறினார்.

பிற நாடுகளுடன் இந்தியாவின் உறவு என்பது, அங்கு எத்தகைய அரசு இருக்கிறது என்பதை பொறுத்து அல்ல. இந்தியாவின் நலன்கள் மற்றும் பாதுகாப்புக்கு அந்த நாடு எந்த அளவுக்கு உகந்ததாக உள்ளது என்பதைப் பொறுத்தது என்று அவர் வெளிப்படையாக கூறினார். சாவர்க்கர், 20-ம் நூற்றாண்டில் இந்தியாவின் முதல் ராணுவ உத்தி விவகார நிபுணர் ஆவார். நாட்டுக்கு வலுவான பாதுகாப்பு மற்றும் ராஜதந்திர கோட்பாட்டை அவர் வழங்கினார்.இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x