Published : 13 Oct 2021 05:48 AM
Last Updated : 13 Oct 2021 05:48 AM

மனித உரிமை தொடர்பான விவகாரங்களை - அரசியல் கண்ணோட்டத்தில் அணுகக்கூடாது : தேசிய மனித உரிமைகள் ஆணைய 28-ம் ஆண்டு விழாவில் பிரதமர் மோடி கருத்து

மனித உரிமை விவகாரங்களை அரசியல் கண்ணோட்டத்தில் அணுகக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 28-வது ஆண்டு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அவர் பேசியதாவது:

இந்தியாவின் விடுதலைப் போராட்ட வரலாறு மனித உரிமைகளுக்கான ஊக்க சக்தியாக விளங்குகிறது. ஒரு நாடு, ஒரு சமூகம்என்ற முறையில் அநீதி, அராஜகங்களை நாம் துணிச்சலாக எதிர்த்துள்ளோம். பல நூற்றாண்டுகளாக நமது உரிமைகளுக்காகப் போராடியிருக்கிறோம். முதலாம் உலகப் போரின்போது ஒட்டுமொத்த உலகமும் வன்முறையால் பாதிக்கப்பட்டிருந்தது. அப்போது அகிம்சை பாதையில் செல்ல உலக நாடுகளுக்கு இந்தியா வழிகாட்டியது.

மனித உரிமைகளுக்கும் ஏழைகளின் கவுரவத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. அரசுத் திட்டங்களில் சமமான பங்கினை ஏழைகள் பெறமுடியாதபோது மனித உரிமைகள் பிரச்சினைகள் எழுகின்றன. எனவே ஏழைகளின் கவுரவத்தை உறுதி செய்ய மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ஒருவர் கழிப்பறை வசதியைப் பெறும்போது அவருக்கு கவுரவம் கிடைக்கிறது. ஓர் ஏழை, ஜன் தன்வங்கி கணக்கினை தொடங்கும்போது அவரது கவுரவம் உறுதி செய்யப்படுகிறது. உஜ்வாலா எரிவாயு இணைப்புகள், பெண்களுக்கு சொத்துரிமை ஆகியவை பெண்களுக்கான கவுரவத்தை வழங்குகின்றன.

முத்தலாக் விவாகரத்து நடைமுறைக்கு எதிரான சட்டத்தை இயற்றுமாறு முஸ்லிம் பெண்கள் கோரினர். இதை ஏற்று முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் முஸ்லிம் பெண்களின் உரிமைகள் மீட்கப்பட்டுள்ளன.

அனைத்து துறைகளிலும் பெண்களுக்கான கதவுகள் திறக்கப்பட்டு, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 24 மணி நேரமும் அவர்கள் பாதுகாப்பாக பணியாற்றும் சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மனித உரிமைகளை மதித்து, பாதுகாப்பது நமது கடமை. ஆனால் சிலர் தங்களின் சுயலாபத்துக்காக மனித உரிமைகள் விவகாரங்களை எழுப்புகின்றனர். சுயலாபத்துக்காக ஒருதலைப்பட்சமாக விமர்சிக்கின் றனர், மனித உரிமைகள் என்ற பெயரில் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்து கின்றனர்.

குறிப்பிட்ட சில விவகாரங்களில் மட்டும் மனித உரிமைகள் பிரச்சினையை எழுப்புகின்றனர். இதரமனித உரிமைகள் பிரச்சினைகளை கண்டும் காணாமல் உள்ளனர்.எந்தவொரு மனித உரிமை பிரச்சினையையும் அரசியல் கண்ணோட்டத்தில் அணுகக்கூடாது.ஒருதலைப்பட்சமான அணுகுமுறைஜனநாயகத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x