Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM

மூன்று முறை தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் நெடுமுடி வேணு காலமானார் :

திருவனந்தபுரம்: மலையாளத் திரையுலகில் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்து அசத்திய நெடுமுடி வேணு (73) உடல்நலமின்மையால் நேற்று காலமானார்.

மலையாளம், தமிழ் மொழிகளில் 500-க்கும் அதிகமான படங்களில் நடித்திருப்பவர் நெடுமுடி வேணு. அண்மையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். எனினும் மீண்டும் இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே கல்லீரல் பிரச்சினைக்காகவும் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் திடீர் உடல்நலக் குறைவால் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் காலமானார்.

ஆலப்புழா மாவட்டம் நெடுமுடி பகுதியை பூர்வீகமாகக் கொண்ட இவரது நிஜப்பெயர் கேசவன் வேணுகோபால். சினிமாவுக்காக தன் ஊர் பெயரான நெடுமுடி என்பதையும் சேர்த்துக் கொண்டார். சித்ரம், பரதம், வந்தனம், மணிச்சித்ரதாழ், சந்திரலேகா, அப்துல்லா, மார்க்கம், அரிம்பரா உள்ளிட்ட படங்கள் அவரது திரைப்பயண வாழ்க்கையில் மிக முக்கியமானவை. தமிழில் இந்தியன், அந்நியன், சர்வம் தாள மயம், பொய் சொல்லப் போறோம், அண்மையில் ஓடிடியில் வெளியான நவரசா உட்பட பல படங்களிலும் நெடுமுடி வேணு நடித்திருந்தார்.

’தம்பு’ என்னும் திரைப்படத்தின் மூலம் கடந்த 1978-ம் ஆண்டு மலையாளத் திரையுலகுக்கு அறிமுகமானார். ஆரம்பத்தில் நெடுமுடி வேணு பத்திரிகையாளராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். ஷாருகென் என்ற ஆங்கிலப் படத்திலும் நெடுமுடி வேணு நடித்திருந்தார். அது கடந்த 2017-ம் ஆண்டு வெளியானது. கடந்த 1991, 2003, 2006 ஆகிய 3 ஆண்டுகளில் தேசிய விருதையும் 6 முறை கேரள அரசின் விருதையும் பெற்றிருக்கிறார் நெடுமுடி வேணு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x