Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM

தெலுங்கு நடிகர் சங்கத் தலைவர் தேர்தல் நடிகர் பிரகாஷ் ராஜ் தோல்வி :

ஹைதராபாத்: தெலுங்கு திரைப்பட உலகில் ‘மூவி ஆர்ட்டிஸ்ட்ஸ் அசோசியேஷன்ஸ்’ (மா) எனும் பெயரில் நடிகர் சங்கம் இயங்கி வருகிறது. இச்சங்கத்தின் நிர்வாகிகளுக்கு நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடந்தது.

இதில் நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகர் மோகன் பாபுவின் மகனும் நடிகருமான விஷ்ணு ஆகியோர் இரு பிரிவுகளாக களத்தில் இறங்கினர்.

தேர்தலில் மொத்தமுள்ள சுமார் 650 உறுப்பினர்கள் வாக்களித்தனர். தேர்தலுக்கு முன், இரு பிரிவினருக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் நடந்தன. ஒரு கட்டத்தில், பிரகாஷ்ராஜ் வேற்று மொழிக்காரர் என்றும், வேறு மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும், இது ஒரு தெலுங்கு திரைப்பட நடிகர் சங்கத்துக்கான தேர்தல், ஆதலால், ஒரு தெலுங்கரைத்தான் நாம் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டுமென, பிரகாஷ்ராஜுக்கு எதிராக வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

இதுபோன்ற ஒரு சூழலில் ஞாயிற்றுக்கிழமை வாக்குப்பதிவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. இரவு 9 மணிக்கு மேல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் நடிகர் விஷ்ணு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவர் நடிகர் பிரகாஷ்ராஜை விட 107 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார்.

இந்நிலையில், நேற்று நடிகர் பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் சங்க அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தனது ராஜினாமா விவரத்தை புதிய தலைவர் விஷ்ணுவுக்கு தனது செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x