Published : 03 May 2021 03:15 AM
Last Updated : 03 May 2021 03:15 AM

75 இடங்களில் முன்னிலை - அசாமில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக : காங்கிரஸ் கூட்டணி 48-இல் முன்னிலை

அசாமில் 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.

இரு கட்சிகளும் ஒன்றையொன்று கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பாஜக வும், எதிராக காங்கிரஸும் பிரச்சாரம் செய்தன.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அசாம் கன பரிஷத், ஐக்கிய மக்கள் விடுதலைக் கட்சி ஆகியவை இடம்பெற்றிருந்தன. காங்கிரஸ் கூட்டணியில் ஏஐடியுஎப், போடோலாந்து மக்கள் முன்னணி கட்சிகள் இருந்தன. இவற்றில் போடோலாந்து மக்கள் முன்னணி, தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தது. அசாமை பொறுத்தவரை, போடோலாந்து பிராந்தியத்தில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே மாநிலத்தில் வெற்றி பெற முடியும் என்பது வரலாறு. எனவே போடோலாந்து மக்கள் முன்னணி, காங்கிரஸுக்கு அணி மாறியதால் பாஜகவுக்கு பின்னடைவாக இருக்கும் எனக் கருதப்பட்டது.

இத்தேர்தலில் பாஜக 92 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான அசோம் கன பரிஷத் 26 இடங்களிலும், ஐக்கிய மக்கள் விடுதலைக் கட்சி 8 இடங்களிலும் போட்டியிட்டன. இதேபோல், காங்கிரஸ் 94 தொகுதிகளிலும், ஏஐடியுஎப் 14, போடோலாந்து மக்கள் முன்னணி 18 இடங்களிலும் களம் கண்டன.

தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகளும், பின்னர் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணிநேரத்தில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸும், அதன் கூட்டணிகளும் முன்னிலையில் இருந்தன.

இதனால் அசாம் முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு நேரம் செல்ல செல்ல, காங்கிரஸ் முன்னிலையில் இருந்த பல தொகுதிகள் பாஜக கூட்டணி வசம் வரத் தொடங்கின. மதியம் 2 மணிக்கு மேல் பெரும்பாலான தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.

இந்நிலையில், இரவு 9.30 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 75 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. இதில் பாஜக மட்டும் 56 இடங்களிலும், அசோம் கன பரிஷத் 11 இடங்களிலும், ஐக்கிய மக்கள் விடுதலை முன்னணி 8 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணி 51 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

அசாமில் ஆட்சியமைக்க 64 இடங்கள் போதுமானது என்ற சூழலில், 75 இடங்களில் முன்னிலை வகிக்கும் பாஜக, மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்வது உறுதியாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x