

புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.52 லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் 2,812 ஆனதால், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உட்பட வெளிநாட்டு தலைவர்கள் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்தது. மற்ற நாடுகளிலும் கரோனா தொற்றும், உயிரிழப்பும் அதிகரித்தது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கும் நிலை வந்த போது, அமெரிக்கா உட்பட ஏராளமான நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்தது. முன்னதாக முகக் கவசம், மருத்துவர்களின் பாதுகாப்பு உடை உட்பட மருத்துவ கருவிகள் பற்றாக்குறை ஏற்பட்ட போதும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு டன் கணக்கில் நட்பு அடிப்படையில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலைதற்போது தீவிரமாக இருக்கிறது. கடந்த 5 நாட்களாக தினமும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி வருகிறது.