Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி வாரிசு அரசியல் இளைஞர் நாடாளுமன்ற விழாவில் பிரதமர் மோடி தாக்கு

ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி வாரிசு அரசியல், அது முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

இரண்டாவது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் நிறைவு நிகழ்ச்சி நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று பேசியதாவது:

ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரியான வாரிசு அரசியல் இன்றும் உள்ளது. நாட்டுக்கு சவாலாகஉள்ள வாரிசு அரசியல் முற்றிலும் வேரறுக்கப்பட வேண்டும். குடும்பப் பெயர்களின் அடிப்படையில் தேர்தலில் வெற்றி பெறுவோரின் அதிர்ஷ்டம் குறைந்து வருகிறது என்பது உண்மைதான். என்றாலும் அரசியலில் இருந்து வாரிசு அரசியல் என்ற நோய் முற்றிலும் அகற்றப்படவில்லை. தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுவதையே அரசியல் நோக்கமாகக் கொண்டவர் கள் இன்னும் உள்ளனர். வாரிசு அரசியலை பின்பற்றுவோர் ஒருபோதும் நாட்டு நலனுக்கு முன்னுரிமை அளிக்க மாட்டார்கள். அவர்களின் எல்லா செயல்பாடுகளும் ‘தானும் தனது குடும்பமும்’ என்பதாகவே இருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளை மறைமுகமாகக் குறிப்பிட்டு பிரதமர் மோடி இவ்வாறு கூறினார்.

பிரதமர் மோடி மேலும் பேசும்போது, “நாட்டின் அரசியலுக்கு இளைஞர்களின் சிந்தனை, ஆற்றல் மற்றும் உற்சாகம் தேவைப்படுகிறது. எந்தவொரு இளைஞரும் அரசியலை நோக்கித் திரும்பினால் அந்த இளைஞர் வழிதவறிச் செல்வதாக அவரது குடும்பத்தினர் கூறும் காலம் முன்பு இருந்தது. அனைத்தையும் மாற்ற முடியும், ஆனால் அரசியலை மாற்ற முடியாது என்று கூறுவார்கள்.

இன்று நாட்டு மக்கள் விழிப்புடன் உள்ளனர். அவர்கள் நேர்மையாளர்கள் பக்கம் நின்று, அவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்குகின்றனர். அரசியலில் நேர்மையுடன் பொது நலனுக்காக பாடுபடுவோர் பக்கம் மக்கள் உறுதியுடன் நிற்கிறார்கள். நாட்டில் உருவாகியுள்ள இந்தவிழிப்புணர்வு, ஊழல் மரபுகொண்டவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் ஊழலே அவர்களுக்கு சுமையாகிவிட்டது. இதுவே சாமானிய மக்கள் பெற்ற விழிப்புணர்வின் சக்தி ஆகும்” என்றார்.

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளையொட்டி அவருக்கும் பிரதமர் மோடி தனது உரையில் புகழாரம் சூட்டினார். “விவேகானந்தரின் லட்சியங்கள் எல்லா தலைமுறை மக்களுக்கும் உத்வேகம் அளிக்கக் கூடியது” என்றார்.

இந்த நிகழ்ச்சியில், தேசிய நாடாளுமன்ற விழாவில் தேசிய அளவில் வெற்றி பெற்ற 3 பேர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x