Published : 12 Jan 2021 03:13 AM
Last Updated : 12 Jan 2021 03:13 AM

கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசியல்வாதிகள் அவசரப்படக் கூடாது மாநில முதல்வர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை

கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசியல்வாதிகள் அவசரப்படக்கூடாது என்றுபிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

புனேவின் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கும் கோவிஷீல்டு, ஹைதராபாத்தின் பாரத் பயோ டெக் தயாரிக்கும் கோவேக்ஸின் கரோனா தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (டிசிஜிஐ) கடந்த 3-ம் தேதி அனுமதி வழங்கியது. வரும் 16-ம் தேதி முதல் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது.

இதையொட்டி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:

உலகின் மிகப்பெரிய கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்க உள்ளோம். அடுத்த சில மாதங்களில் சுமார் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர், போலீஸார், மத்தியபடை வீரர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் என சுமார் 3 கோடி பேருக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும். இதற்கான செலவை மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும்.

இரண்டாம் கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், நாள்பட்ட நோயாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி போடப்படும்.

உலகளாவிய கரோனா தடுப்பூசிகளை ஒப்பிடும்போது இந்தியாவின் 2 கரோனா தடுப்பூசிகளின் விலை குறைவு, தரம் நிறைவானது. மேலும் 4 கரோனா தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளன. அந்த தடுப்பூசிகளுக்கு அனுமதி கிடைத்தவுடன் தடுப்பூசி போடும் பணி வேகம் பெறும். கரோனா தடுப்பூசிகளை கடைநிலை வரை கொண்டு செல்ல மத்திய, மாநிலஅரசுகள் இணைந்து செயல்படுகின்றன. கூட்டாட்சி தத்துவத்துக்கு இந்தியா முன்னுதாரணமாக திகழ்கிறது.

கரோனா தடுப்பூசி போடும் பணியில் மிக முக்கியமானது பயனாளிகளை தேர்வு செய்வது ஆகும். இதற்காக கோ வின் என்ற டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்ததளத்தில் அனைத்து அம்சங்களும் இடம்பெற்றிருக்கும். அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும். கரோனா தடுப்பூசியை 2 முறை போட்டுக் கொள்ள வேண்டும். முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டதும் டிஜிட்டல் சான்றிதழ் வழங்கப்படும். 2-வது தடுப்பூசி போட்ட பிறகு இறுதி சான்றிதழ் அளிக்கப்படும்.

தடுப்பூசி போடும் திட்டத்தை சீர்குலைக்க உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த சக்திகள் முயற்சி செய்யக்கூடும். இதற்காக வதந்திகள் பரப்பப்படலாம். இவற்றை பொதுமக்கள் நம்ப வேண்டாம். தடுப்பூசி தொடர்பான வதந்திகளை

அந்தந்த மாநில அரசுகள் தடுக்க வேண்டும். இந்த பணியில் சமூக, ஆன்மிக, தன்னார்வ குழுக்களை பயன்படுத்தலாம்.

கரோனா தடுப்பூசி போடுவதற்காக முன்னுரிமை பட்டியலில் அரசியல்வாதிகளுக்கு இடம் அளிக்கப்படவில்லை. தடுப்பூசி போட்டுக்கொள்ள அவர்கள் அவசரப்படக்கூடாது, வரிசைக்கு முந்தக்கூடாது. அவர்களது முறை வரும்போது மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

சர்வதேச அளவில் இதுவரை 2.5 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடஉள்ளோம். இந்தியாவின் நடைமுறையை ஒட்டுமொத்த உலகமும் பின்பற்றும்.

கேரளா, ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், குஜராத், ஹரியாணா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டிருக்கிறது. அந்த மாநிலங்களின் அரசுகள், பறவைக் காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x