Last Updated : 12 Jan, 2021 03:13 AM

 

Published : 12 Jan 2021 03:13 AM
Last Updated : 12 Jan 2021 03:13 AM

சான் பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூரு வரை விமானத்தை இயக்கி பெண் விமானிகள் சாதனை ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூரு வரை 17 மணி நேரம் ஏர் இந்தியாவின் நீண்ட தூர விமானத்தை முழுவதும் பெண் விமானிகளே இயக்கி சாதனை படைத்துள்ளனர்.

ஏர் இந்தியா விமான நிறுவனம் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூருவுக்கு முழுவதும் பெண் விமானிகளை கொண்டு விமானம் இயக்க கடந்த ஆண்டு திட்டமிட்டது. அதன்படி நேற்று முன் தினம் இரவு உள்ளூர் நேரப்படி 8.30 மணிக்கு ஏர் இந்தியா(போயிங் 777 ‍- 200 எல்.ஆர்) விமானம் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்டது. இந்த விமானத்தை கேப்டன்சோயா அகர்வால், கேப்டன் பாபகிரி தன்மய், கேப்டன் அகன்ஷா சோனாவர், கேப்டன் சிவானி மன்ஹாஸ் ஆகியோர் இயக்கினர்.

இந்த விமானம் வடதுருவத்தின் மேலே பறந்து அட்லாண்டிக் பாதையை கடந்து உலகின் மற்றொரு முனையை தொட்டு பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 3.6 மணிக்கு தரை இறங்கியது. இடையில் நில்லாமல் வானத்திலே 17 மணி நேரம் பறந்து சுமார் 13 ஆயிரத்து 993 கிமீ தூரத்தை கடந்து வெற்றிகரமாக பெங்களூரு வந்தடைந்தது.

இந்திய விமானத் துறையில் முதன் முதலாக மிக நீண்ட தூரம் விமானத்தை இயக்கிய பெண் விமானிகளுக்கு விமான நிலைய அதிகாரிகள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்த‌னர். விமானத்தில் பயணித்த288 பயணிகளும் பெண் விமானிகளுக்கு ரோஜா மலர்களையும், சாக்லேட்களையும் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த பயணம் குறித்து விமானி கேப்டன் பாபகிரி தன்மய், ‘‘இது மறக்கவே முடியாத மகிழ்ச்சியான பயணம். இந்த அரிய முயற்சியை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் மிக்க நன்றி. இந்தபயணத்துக்காக நீண்ட காலமாக திட்டமிட்டு முறையான பயிற்சிகளை மேற்கொண்டோம். கரோனா தொற்று காலக்கட்டத்திலும் எங்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. எங்களது முயற்சியை பயணிகளும் ஏற்றுக்கொண்டு நல்ல ஒத்துழைப்பை வழங்கினர். சான் பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூரு வரை எல்லா தரப்பில் இருந்தும் எங்களுக்கு உற்சாக வரவேற்பும், பாராட்டுக்களும் கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது''என்றார்.

இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங், ‘‘இந்த மகிழ்ச்சிக்குரிய வரலாற்றை படைத்துள்ளஅனைத்து பெண் விமானிகளுக்கும் என் பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த அரியசாதனையை படைத்த பெண் விமானிகளை இந்திய விமானபோக்குவரத்து துறை கொண்டாடுவதில் பெருமிதம் கொள்கிறது''என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, '' உலகின் இரு துருவங்களையும் கடந்து, இடையில் எங்கும் நில்லாமல் நீண்ட தூரம் பயணித்து இந்திய‌ பெண் விமானிகள் மிகப் பெரிய சாதனையை படைத்துள்ளனர். இந்த பெண்களின் சாதனை வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்''என வாழ்த்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x