Published : 17 Dec 2021 03:06 AM
Last Updated : 17 Dec 2021 03:06 AM

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது - பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த சட்டத் திருத்தம் : விரைவில் மசோதா தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது, வாக்காளர் சேர்க்கை நடைமுறையை எளிதாக்குவது உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இவை தொடர்பான சட்டத் திருத்த மசோதாக்கள் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு சுதந்திர தின விழாவின்போது செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘பெண்களின் திருமண வயதை மறுபரிசீலனை செய்ய குழு அமைக்கப்படும். அந்த குழு அளிக்கும் அறிக்கையின்படி பெண்களின் சரியான திருமண வயது நிர்ணயிக்கப்படும்’ என்று அறிவித்தார். இதையடுத்து, ஜெயா ஜேட்லி தலைமையில் அமைக்கப்பட்ட 10 பேர் கொண்ட குழு, பல்வேறு தரப்பு பெண்களின் கருத்துகளை கேட்டறிந்தது. அதன் அடிப்படையில் பெண்களுக்கான திருமண வயது, சிசு இறப்பு விகிதம், பெண்கள், குழந்தைகளின் ஊட்டச்சத்து ஆகியவை தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பரில் மத்திய அரசிடம் விரிவான பரிந்துரைகளை சமர்ப்பித்தது.

நாடு முழுவதும் 18 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ஆண்டுதோறும் சுமார் 16 கோடி பெண்களுக்கு திருமணம் நடக்கிறது. வயது முதிர்வின்மை காரணமாக இளம் வயது பெண்கள் திருமண வாழ்வில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். மேலும், தாய்மைக்கான உடல் திறன், கரு வளர்ச்சி, சிசு உயிரிழப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளும் எழுகின்றன. இவற்றை கருத்தில்கொண்டு பெண்களுக்கான திருமண வயது வரம்பை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தலாம் என்று ஜெயா ஜேட்லி குழு மத்திய அரசிடம் பரிந்துரை செய்தது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஜெயா ஜேட்லி குழுவின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்தப்பட உள்ளது. இதற்காக குழந்தை திருமணம் தடை சட்டத்தில் உரிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. மேலும், அனைத்து மதத்தினரும் புதிய நடைமுறையை பின்பற்ற 4 சட்டங்களில் திருத்தம் செய்யப்பட உள்ளது.

தேர்தல் சீர்திருத்தங்கள்

அதேபோல, தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரைகளுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி 1-ம் தேதியை அடிப்படையாக வைத்து 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படுகின்றனர். இதனால், ஜனவரி 2-ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஓராண்டு வரை காத்திருக்கும் நிலை உள்ளது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண ஓராண்டில் 4 முறை புதிய வாக்காளர்களை சேர்க்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். போலி வாக்காளர்களை களைய வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.

இந்த பரிந்துரைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி, ஓராண்டில் ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய தேதிகளை கணக்கில்கொண்டு வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படுவர். தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்துக்கும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. ஏற்கெனவே 33 கோடி வாக்காளர் அட்டைகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்காளர் அட்டைகளுடன் ஆதார் இணைக்கப்பட்டால் போலி வாக்காளர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்களின் திருமண வயது உயர்வு, தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான சட்டத் திருத்த மசோதாக்கள், நாடாளுமன்றத்தின் நடப்பு குளிர்கால கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாசன திட்டங்கள்

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 2021-26 வரையான காலத்தில் பிரதமரின் வேளாண் பாசன திட்ட அமலாக்கத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, ரூ.93,068 கோடி மதிப்பில் நீர்ப்பாசன திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. வேளாண் திட்டங்கள் தொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய அரசின் உதவியாக ரூ.37,454 கோடி வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. புதிய திட்டங்களால் 2021-26 வரையிலான காலத்தில் கூடுதலாக 13.88 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும் என்று மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x