Published : 14 Dec 2021 03:07 AM
Last Updated : 14 Dec 2021 03:07 AM

ரூ.339 கோடியில் புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் வளாகம் - நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி : கங்கையில் புனித நீராடினார் தொழிலாளர்கள் மீது மலர்தூவி வாழ்த்து

காசி விஸ்வநாதர் கோயில் வளாகம் ரூ.339 கோடி செலவில் 3 ஆயிரம் சதுர அடியில் இருந்து 5 லட்சம் சதுர அடியாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட கோயிலை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

கங்கையில் புனித நீராடிய அவர், விஸ்வநாதர் கோயிலில் வழிபாடு நடத்தினார். கோயில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட தொழிலாளர்கள் மீது மலர் தூவி வாழ்த்தினார். அவர்களோடு இணைந்து மதிய உணவு சாப்பிட்டார்.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உலக பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் கங்கையில் நீராடி, புனித நீரை எடுத்துச் சென்று கோயிலில் வழங்குவது வழக்கமாகும். காசி கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால், நெரிசல் மிகுந்த தெருக்கள், மோசமான சுற்றுப்புறத்தை கடந்து பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண விஸ்வநாதர் கோயிலையும் கங்கை நதியின் கரைகளையும் இணைக்கும் வகையில் விரிவான பாதையை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டார். இதன்படி, கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி கோயில் வளாகத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக கோயிலை சுற்றியிருந்த 300-க்கும் மேற்பட்ட சொத்துகள் கையகப்படுத்தப்பட்டன.

இந்த திட்டத்தில் அதிக ஆர்வம் காட்டிய பிரதமர், அடிக்கடி வாரணாசிக்கு வந்து ஆலோசனைகளை வழங்கினார். அவரது ஆலோசனையின்படி மாற்றுத் திறனாளிகளும் எளிதில் வந்து செல்லும் வகையில் சாய்தளங்கள், நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்ட நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. சுற்றுலா வசதி மையம், வேத மையம், அருங்காட்சியகம், பார்வையாளர் மாடம், உணவு விடுதிகள் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டன.

பழைய கட்டிடங்களை இடிக்கும்போது 40-க்கும் மேற்பட்ட பழமையான கோயில்கள் கண்டறியப்பட்டன. அவை பாதுகாக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டன. விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் ஆதி சங்கராச்சாரியார், பாரத மாதா, ராணி அகில்யாபாய் ஹோல்கர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. சுமார் 3 ஆயிரம் சதுர அடியாக இருந்த கோயில் வளாகம், ரூ.339 கோடி செலவில் 5 லட்சம் சதுர அடி அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

புதுப்பிக்கப்பட்ட விஸ்வநாதர் கோயில் வளாகத்தை திறந்துவைக்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை வாரணாசி சென்றார். அவரை ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றனர். முதலில் கால பைரவர் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு வழிபாடு நடத்தினார். காரில் சென்ற அவரை வழிநெடுகிலும் மக்கள் கூடி நின்று மலர்களை தூவி வரவேற்றனர்.

பின்னர் கிர்கியா படித்துறையில் இருந்து, 2 அடுக்கு படகில் லலிதா படித்துறைக்கு சென்று, காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அவர் சென்றார். கங்கையில் புனித நீராடிவிட்டு, கோயிலில் சிறப்பு வழிபாடுகளை நடத்தினார்.

அதன்பிறகு புதுப்பிக்கப்பட்ட கோயில் வளாக முதல்கட்ட திட்டத்தை பக்தர்கள் பயன்பாட்டுக்கு அவர் திறந்துவைத்தார். அங்கு நடந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:

பழமையும் புதுமையும் இணைந்த புனிதத் தலமாக காசி விஸ்வநாதர் கோயில் விளங்குகிறது. இந்த வளாகம் வெறும் பிரம்மாண்ட கட்டிடம் கிடையாது. இது இந்தியாவின் ஆன்மிக கலாச்சாரம், பாரம்பரியம் ஆகும். நமது ஆன்மிக ஆன்மாவின் சின்னமாகும். கோயில் வளாகம் 3 ஆயிரம் சதுர அடியில் இருந்து 5 லட்சம் சதுர அடியாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரே நேரத்தில் 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் பக்தர்கள் கோயிலுக்குள் வந்து செல்ல முடியும்.

காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வரும்போது பக்தி மட்டுமன்றி நமது பழங்கால வரலாற்றையும் உணர்ந்து கொள்ள முடியும். இந்தியா மீது படையெடுத்தவர்கள் காசியை பலமுறை தாக்கினர். இந்த புனித தலத்தை அழிக்க முயன்றனர். அவுரங்கசீப் தனது வாளால் ஆதிக்கத்தை செலுத்த முயன்றார். இந்தியாவின் சிறப்பு என்னவென்றால் அவுரங்கசீப் வந்தால் அவருக்கு முன்பாக வீர சிவாஜி கம்பீரமாக எழுந்து நிற்பார். சலார் மசூத் இங்கு வந்தால், மன்னர் சுஹேல்தேவ் போன்ற துணிச்சலான வீரர்கள் நமது ஒற்றுமையின் சக்தியை வெளிப்படுத்துவர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வாரன் ஹேஸ்டிங்குக்கு காசி மக்கள் என்ன செய்தார்கள் என்பதை அனைவரும் அறிவோம்.

3 உறுதிமொழிகள்

என்னை பொறுத்தவரை ஒவ் வொரு இந்தியரும் கடவுளின் ஒரு பகுதி ஆகும். அவர்களிடம் இருந்து 3 உறுதிமொழிகளை எதிர்பார்க்கிறேன். முதலாவது, ஒவ்வொரு இந்தியரும் தூய்மையை கடைபிடிக்க வேண்டும். இரண்டாவது, புதிய படைப்புகளை உருவாக்க வேண்டும். மூன்றாவது, சுயசார்பு இந்தியாவை உருவாக்க உறுதுணையாக இருக்க வேண்டும். 130 கோடி மக்களும் ஒன்றிணைந்தால் எதையும் சாதிக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் கோயில் கட்டு மான பணிகளை மேற்கொண்ட தொழி லாளர்கள் மீது பிரதமர் நரேந்திர மோடி சுமார் 10 நிமிடங்கள் மலர்களை தூவி வாழ்த்தினார். அவர்களோடு இணைந்து மதிய உணவு சாப்பிட்டார்.

கங்கை நதியில் மாலையில் நடந்த ஆரத்தி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு நடைபெற்ற லேசர் ஒளி நிகழ்ச்சியையும் அவர் கண்டுகளித்தார். முன்னதாக துறவி ரவிதாஸ் படித்துறையில் பிரதமர் பிரார்த்தனை செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x