Published : 13 Dec 2021 03:06 AM
Last Updated : 13 Dec 2021 03:06 AM

ஒமைக்ரான் கரோனா வைரஸை பரிசோதனை மூலம் - 2 மணி நேரத்தில் கண்டறியும் கருவி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கண்டுபிடித்தது

நாடு முழுவதும் இதுவரை 38 பேர்ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய வைரஸை 2 மணி நேரத்தில் கண்டறியும் பரிசோதனை கருவியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கண்டுபிடித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் உருவான ஒமைக்ரான் என்ற புதிய வகை கரோனா வைரஸ் பல்வேறுநாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவில் சில மாநிலங்களிலும் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அதிவேகமாக பரவும்தன்மை கொண்டது என்று உலகசுகாதார அமைப்பு எச்சரித்துள்ளதால் புதிய வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

மத்திய சுகாதாரத் துறை நேற்றுமுன்தினம் வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி மகாராஷ்டிராவில் 17 பேர், ராஜஸ்தானில் 9 பேர், குஜராத்தில் 3 பேர், டெல்லி, கர்நாடகாவில் தலா 2 பேர் என மொத்தம் 33 பேர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் ஆந்திரா, சண்டிகர், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிராவில் தலா ஒருவருக்கு நேற்றுஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.அவர்களையும் சேர்த்து நாடு முழுவதும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.

கேரள அமைச்சர் விளக்கம்

கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கேரளாவில் முதல்முறையாக பிரிட்டனில் இருந்து எர்ணாகுளத்துக்கு வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட முதல்கட்ட கரோனா பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்படவில்லை. 8 நாட்கள்தனிமைப்படுத்தப்பட்ட பிறகு மீண்டும் பரிசோதனை செய்தபோது கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

அவரது சளி மாதிரி மரபணு வரிசை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் அவர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரை தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம். தற்போது அவரதுதாயார், மனைவிக்கும் கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களது சளி மாதிரிகளும் மரபணு வரிசை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆந்திர நோயாளி குணமடைந்தார்

அயர்லாந்தில் இருந்து 34 வயது நபர் ஒருவர் அண்மையில் ஆந்திரா திரும்பினார். மருத்துவப்பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் அவரது சளி மாதிரி மரபணு பரிசோதனைக்காக ஹைதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அவர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

விஜயநகரம் அரசு மருத்துவமனையின் தனி வார்டில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போதுகுணமடைந்துள்ளார் என்று ஆந்திர சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்படும் நோயாளிகளின் மாதிரிகள் மரபணு வரிசை பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது. இதன்மூலம் அவர்கள் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனரா அல்லது டெல்டா உள்ளிட்ட வேறுவகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை கண்டறிய முடியும்.

முதல்கட்ட மரபணு வரிசை பரிசோதனைக்கு குறைந்தபட்சம் 36 மணி நேரம் தேவைப்படுகிறது. முழுமையான மரபணு பரிசோதனைக்கு 4 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை ஆகிறது.

இந்தச் சூழலில் அசாமின் திப்ருகரில் செயல்படும் மத்திய அரசின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) விஞ்ஞானிகள், ஒமைக்ரான் வைரஸை 2 மணி நேரத்தில் கண்டறியும் புதிய பரிசோதனை கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து ஐசிஎம்ஆர் மூத்தவிஞ்ஞானி விஸ்வஜோதி போர்காகோட்டி கூறும்போது, ‘‘எங்களது பரிசோதனை கருவி மூலம் 100 சதவீதம் துல்லியமாக முடிவுகளை அறிந்து கொள்ள முடியும்’’ என்று தெரிவித்தார். கொல்கத்தாவைச் சேர்ந்த ஜிசிசி பயோடெக் நிறுவனமும் ஐசிஎம்ஆர் அமைப்பும் இணைந்து புதிய பரிசோதனை கருவியை தயாரிக்க உள்ளன.

ஒமைக்ரான் வைரஸால் இந்தியாவில் 3-வது கரோனா அலை ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த நேரத்தில் மிக குறுகிய நேரத்தில் ஒமைக்ரான் வைரஸை கண்டறியும் பரிசோதனைகருவி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பெரிதும் உதவும் என்று சுகாதாரத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்காசிய மண்டல இயக்குநர் டாக்டர் பூனம் கேத்ரபால் கூறும்போது, ‘‘ஒமைக்ரான் வைரஸ் மோசமானதாக இருக்கும்என்று அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. அதன் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து பரிசோதனை நடத்தி வருகிறோம். முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட கரோனா தடுப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x