Published : 13 Dec 2021 03:06 AM
Last Updated : 13 Dec 2021 03:06 AM

நாட்டின் வளர்ச்சியில் வங்கிகளுக்கு முக்கிய பங்கு - வைப்புதாரர்களை பாதுகாக்க வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

டெல்லியில் நேற்று நடைபெற்ற வங்கி வைப்புத் தொகை திட்டம் தொடர்பான நிகழ்ச்சியில் பயனாளி ஒருவருக்கு காசோலை வழங்குகிறார் பிரதமர் நரேந்திர மோடி. உடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், மத்திய நிதித் துறை இணை அமைச்சகர்கள் பகவத் கிஷன்ராவ் காரத் மற்றும் பங்கஜ் சவுத்ரி.படம்: பிடிஐ

புதுடெல்லி

நாட்டின் வளர்ச்சியில் வங்கிகள் முக்கிய பங்காற்றுகின்றன. வைப்புதாரர்களை பாதுகாத்தால் அதன்மூலம் வங்கிகளை பாதுகாக்க முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

வங்கிகள் திவால் நிலைக்கு உள்ளாகும்பட்சத்தில், அவற்றில் வைப்புத்தொகை வைத்திருக்கும் வாடிக்கையாளருக்கு ரூ.1 லட்சம் வரை மட்டுமே காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், காப்பீட்டுத் தொகை வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தி, அந்தத் தொகை 90 நாட்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கவும் மத்திய அரசு வழி செய்தது. அதுதொடர்பான மசோதா கடந்தஆகஸ்ட் மாதத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், வங்கி வைப்புத்தொகை காப்பீட்டுத் திட்டம் தொடர்பாக டெல்லி விக்யான் பவனில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

முந்தைய காலகட்டங்களில் வங்கிகளில் ஏற்படும் நெருக்கடியால் நடுத்தர, ஏழை மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால், இன்றைய புதிய இந்தியா அத்தகைய பிரச்சினைகளை சரிசெய்ய உறுதி பூண்டுள்ளது. பாஜக தலைமையின்கீழ் செயல்பட்டுவரும் மத்திய அரசு, நிதிஅமைப்பை மேம்படுத்தி உள்ளது.நடுத்தர, ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் கடந்த 7 ஆண்டுகளில் மத்திய அரசு பல்வேறுசீர்திருத்தங்களை கொண்டுவந்துள்ளது.

வங்கிகள் திவால் நிலைக்கு உள்ளாகும் நேரத்தில், அதில் வைப்புத்தொகை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அந்தத் தொகை 90 நாட்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில், 1 லட்சம் வங்கி வைப்புதாரர்களுக்கு, அவர்களுக்குரிய தொகை திரும்ப கிடைத்துள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.1,300 கோடி. விரைவில், இன்னும் 3 லட்சம் வங்கி வைப்புதாரர்கள் அவர்களுக்கான தொகையை திரும்பப் பெறுவர். இந்தியாவில் உள்ள வங்கி வைப்புத்தொகையான ரூ.76 லட்சம் கோடிக்கும் இப்போது காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் வளர்ச்சியில் வங்கிகள் முக்கிய பங்காற்றுகின்றன. முதலில் வைப்புதாரர்களை பாதுகாக்க வேண்டும். அதன்மூலம் வங்கிகளை பாதுகாக்க முடியும்.

இவ்வாறு பிரதமர் பேசினார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x