Published : 12 Dec 2021 03:08 AM
Last Updated : 12 Dec 2021 03:08 AM

அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம் பெறுவதே இலக்கு - ரூ.300 கோடியில் ‘நமக்கு நாமே திட்டம்’ : சேலத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

ஐந்தாண்டு காலத்துக்குள் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முதலிடம் என்கிற இலக்கை எட்டும். அதுதான் என்னுடைய இலக்கு. அதற்காக நான் நாள், நேரம் பார்க்காமல் உழைத்துக் கொண்டே இருப்பேன் என சேலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் சாலையில் பல்வேறு துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புதிய திட்டப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில், மாநில அளவில் ரூ.300 கோடி மதிப்பீட்டில், ‘நமக்கு நாமே திட்டம்,’ ரூ.100 கோடி மதிப்பீட்டில் ‘நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம்’ ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுதவிர ரூ.38.53 கோடி மதிப்பீட்டிலான 83 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்துவைத்தும் ரூ.54.01 கோடி மதிப்பீட்டிலான 60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் 30,837 பயனாளிகளுக்கு ரூ.168.64 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி பேசியதாவது:

முதல்வராக நான் பதவியேற்றதும் மறைந்த முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினேன். அப்போது, பத்திரிகையாளர்கள் என்னிடத்தில் ‘தேர்தலில் திமுக வெற்றி பெற்றது பற்றி கருத்து கேட்டபோது, “இந்த ஆட்சி வரவேண்டும் என்று வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காத மக்களையும் கவரக்கூடிய வகையில் என்னுடைய பணிஇருக்கும், அவர்களுக்கும் சேர்த்துதான் இந்த ஆட்சி” என்று சொன்னேன்.

அதனால்தான் கடந்த தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று 100 நாட்களில் அப்பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என்ற நிகழ்ச்சியை நடத்தினோம். இதுவரை 50 சதவீதம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமச்சீரான வளர்ச்சியை எட்டிட, சம உரிமை கொடுக்கக்கூடிய வகையில் திட்டங்களை உருவாக்கித்தர ஏராளமான திட்டப்பணிகளை தீட்டி நாங்கள் தொடங்கி வைத்துக்கொண்டிருக்கிறோம்.

சில நாட்களுக்கு முன்னர் வறுமைகுறைவான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 4-வது இடத்தில் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சுட்டிக்காட்டியது. இது மகிழ்ச்சிக்குரியதாக இருந்தாலும், அப்புள்ளி விவரம் எனக்கு முழு மகிழ்ச்சியைத் தரவில்லை.

வறுமையை முழுவதுமாக ஒழிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பசி என்பதே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். வறுமையே இல்லாத மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலாவதாக இருக்க வேண்டும். அதுதான் நமக்குப் பெருமை. அத்தகைய சூழலை உருவாக்கத்தான் இந்த அரசு முழு முயற்சியோடு களத்தில் இறங்கி இருக்கிறது.

இன்னும் ஐந்தாண்டு காலத்துக்குள் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முதலிடம் என்கிற இலக்கை எட்டும், அதுதான் என்னுடைய இலக்கு. அதற்காகத்தான் நான் நாள், நேரம் பார்க்காமல் உழைத்துக் கொண்டே இருப்பேன்.

புதிய திட்டமான ‘நமக்கு நாமே திட்டம்’ மூலம் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளின் மதிப்பீட்டில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்பு நிதி மற்றும் அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.

அதேபோல, நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் மூலம் நகர்ப்புறஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வேலைவாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு பேசினார்.

முன்னதாக விழா மேடையின் கீழ் அமர்ந்திருந்த பொதுமக்களை தேடிச் சென்று முதல்வர் நேரடியாக மனுக்களை பெற்றார். மேலும், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

முன்னதாக விழாவில் பங்கேற்றவர்களை ஆட்சியர் கார்மேகம் வரவேற்றார். விழாவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சு.முத்துசாமி, மா.மதிவேந்தன், என்.கயல்விழி செல்வராஜ், எம்பி-க்கள் பொன்.கவுதம் சிகாமணி, எஸ்.ஆர்.பார்த்திபன், ஏ.கே.பி.சின்ராஜ், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், எம்எல்ஏ.க்கள் ராஜேந்திரன், அருள், சதாசிவம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படத் திறப்பு

மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும் திமுக மாநிலத் தேர்தல் பணிக் குழு செயலாளராக இருந்த வீரபாண்டி ராஜா என்கிற ராஜேந்திரன் (59) கடந்த அக்டோபர் 2-ம் தேதி மாரடைப்பால் காலமானார். அவரதுபடத்திறப்பு விழா சேலம் ஐந்து ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வீரபாண்டி ராஜாவின் உருவப்படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x