Published : 11 Dec 2021 03:07 AM
Last Updated : 11 Dec 2021 03:07 AM

பீரங்கி குண்டுகள் முழங்க 800 வீரர்கள் அணிவகுத்து மரியாதை - முப்படை தளபதி உடல் தகனம் : பெற்றோரின் உடல்களுக்கு மகள்கள் தீ மூட்டினர்தேசிய கொடியுடன் இளைஞர்கள் எழுச்சி கோஷம்

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத், அவரதுமனைவி மதுலிகாவின் உடல்கள் டெல்லியில் நேற்று தகனம் செய்யப்பட்டன. அவர்களின் உடல்களுக்கு மகள்கள் இருவரும் கண்ணீர் மல்க தீ மூட்டினர். இறுதிச் சடங்கில் 17 சுற்று பீரங்கி குண்டுகள் முழங்க 800 வீரர்கள் அணிவகுத்து மரியாதை செலுத்தினர்.

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த 8-ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உட்பட 13 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் விமானம் மூலம் நேற்று முன்தினம் டெல்லி கொண்டு வரப்பட்டன. டெல்லிபாலம் விமான நிலையத்தில் முப்படைதளபதி உள்ளிட்டோரின் உடல்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தனித்தனியாக ஆறுதல் கூறினார்.

இதைத் தொடர்ந்து முப்படைத் தளபதி மற்றும் அவரது மனைவியின் உடல்கள், டெல்லி காமராஜர் சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, கனிமொழி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவ தளபதி நரவானே, விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி, கடற்படை தளபதி ஹரிகுமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து பிற்பகல் 2.15 மணிக்கு இருவரின் உடல்களும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டு, மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலத்தில் தேசியக் கொடியுடன் திரண்ட ஏராளமான இளைஞர்கள்,‘பாரத் மாதா கீ ஜே’ என்று எழுச்சி கோஷமிட்டனர்.

டெல்லி கன்டோன்மென்ட் பிரார் சதுக்க தகன மயானத்தை மாலை 3.35 மணிக்கு இறுதி ஊர்வலம் அடைந்தது. அங்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். இதையடுத்து இறுதிச் சடங்குகள் நடந்தன. முப்படை தளபதி பிபின் ராவத்தின் மகள்கள் கிருத்திகா, தாரிணி ஆகியோர் பெற்றோரின் உடல்களுக்கு கண்ணீர் மல்க தீ மூட்டினர். அப்போது 17 சுற்று பீரங்கி குண்டுகள் முழங்க, 800 வீரர்கள் அணிவகுத்து நின்று மரியாதை செலுத்தினர்.

இலங்கை ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, பூடான் ராணுவ துணை தளபதி டோர்ஜி, நேபாள ராணுவ மூத்த தளபதி பாலகிருஷ்ண கார்கி,வங்கதேச ராணுவ மூத்த அதிகாரி வாக்கர் உட்பட வெளிநாடுகளின் ராணுவ தளபதிகள் மற்றும் பிரான்ஸ் தூதர் இமானுவேல் லினைன், பிரிட்டிஷ் தூதர் அலெக்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு தூதரக அதிகாரிகளும் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.

(மேலும் செய்தி, படங்கள் உள்ளே)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x