Published : 10 Dec 2021 03:06 AM
Last Updated : 10 Dec 2021 03:06 AM

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் டெல்லி கொண்டு செல்லப்பட்டன - பிபின் ராவத் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி : குன்னூரில் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் தமிழிசை இறுதி அஞ்சலி செலுத்தினர்வழிநெடுகிலும் மக்கள் திரண்டு கண்ணீர்

ஹெலிகாப்டர் விபத்தில் உயி ரிழந்த முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு அவர்களின் உடல்களுக்கு பிர தமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக குன்னூரில் வைக் கப்பட்டிருந்த 13 பேரின் உடல்களுக்கு முதல்வர் ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அஞ்சலி செலுத்தினர். குன்னூரில் இருந்து சூலூருக்கு உடல்களை கொண்டு வந்தபோது வழிநெடுகிலும் மக்கள் திரண்டு நின்று மலர்தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று முன்தினம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன. பின்னர், உடல்கள் பெட்டிகளில் வைக்கப்பட்டு, அவற்றின் மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டது. அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் உடல்கள் ஏற்றப்பட்டு, குன்னூர் வெலிங்டன் பகுதியில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் நாகேஷ் பேரக்ஸ் சதுக்கத்துக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டு, அஞ்சலிக்காக வரிசையாக வைக்கப்பட்டன.

விமானப் படை தளபதி வி.ஆர்.சவுத்ரி, வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி முதல்வர் எம்.ஜே.எஸ்.கலோன், வெலிங்டன் ராணுவ மைய தலைவர் பிரிகேடியர் ராஜேஸ்வர் சிங் மற்றும் ராணுவ அதிகாரிகள், இறந்தவர்களின் உடல்களுக்கு நேற்று காலை மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன், கா.ராமச்சந்திரன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் ஆளுநர் சார்பில் மாவட்ட ஆட்சியர் ச.பா.அம்ரித் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் 13 பேரின் உடல்களும் தமிழக அரசின் 13 அமரர் ஊர்திகளில் ஏற்றப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சூலூரில் உள்ள விமானப்படை தளத்துக்கு கொண்டு வரப்பட்டன. குன்னூர் முதல் சூலூர் வரை ஏராளமான பொதுமக்கள் சாலையோரம் திரண்டு நின்று உடல்களை கொண்டு வந்த ஊர்திகளின் மீது மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர். பெண்கள் பலர் கண்ணீர்விட்டு அழுதனர்.

சூலூர் விமானப்படை தளத்துக்கு கொண்டு வரப்பட்ட உடல் கள், அங்கு தயாராக இருந்த இந்திய விமானப்படையின் ‘சி130-ஜே சூப்பர் ஹெர்குலஸ்’ விமானத்தில் ஏற்றப்பட்டு டெல்லிக்கு அனுப்பப்பட்டன. மற்றொரு விமானப்படை சிறப்பு விமானத்தில் ராணுவ உயரதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர்.

டெல்லி பாலம் விமான நிலையத் தில் அவர்களின் உடல்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

கருப்புப் பெட்டி சிக்கியது

ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் பல மணி நேர தேடுதலுக்கு பின்னர் அதிலிருந்த கருப்பு பெட்டி நேற்று மீட்கப்பட்டது. ஹெலிகாப்டர் விழுந்த இடத்தில் இருந்து 10 அடி தொலைவில் உள்ள பள்ளத்தில் கருப்புப் பெட்டி பொருத்தப்பட்டிருந்த உதிரி பாகத்தை விமானப் படையினர் நேற்று காலை கண்டறிந்தனர். அதிலிருந்த கருப்புப் பெட்டியை மீட்டனர். விமானி உள்ளிட்டோரின் குரல்கள், விபத்து நடந்த சமயத்தில் ஹெலிகாப்டரின் நிலை என்ன என்பது போன்றவற்றை ராணுவத்தினர் கண்டறிய இந்த கருப்புப் பெட்டி உதவும். மீட்கப்பட்ட கருப்புப் பெட்டியை விமானப்படை அதிகாரிகள், டெல்லியில் உள்ள விமானப் படையின் தலைமை அலுவலகத்துக்கு உடனடியாக கொண்டு சென்றனர்.

ஹெலிகாப்டர் விபத்து சதியா? விசாரணை தொடங்கியது

பாதுகாப்பு அம்சங்கள் பல நிறைந்த ஹெலிகாப்டர், விபத்தில் சிக்கியதற்கு காலநிலை காரணமா அல்லது சதிச் செயலா என்ற சந்தேகம் ராணுவத்தினர், காவல்துறையினரிடையே மட்டுமின்றி பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

வழக்கமாக சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூருக்கு ஹெலிகாப்டரில் ராணுவ உயரதிகாரிகள் செல்வதாக இருந்தால், அதற்கு முன்பு இருமுறைக்கு மூன்று முறை ஒத்திகை பார்க்கப்படும். விஐபி ஹெலிகாப்டருடன் பைலட் ஹெலிகாப்டர்களும் செல்லும். ஆனால், முப்படை தலைமை தளபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சென்றபோது, பைலட் ஹெலிகாப்டர்கள் உடன் வராதது ஏன்? பனி மூட்டம் மாறி மாறி வீசியபோதும், வான்வெளி பயணத்தை மேற்கொண்டது ஏன் என்ற கேள்விகளும் எழுகிறது.

தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில், லேசர் அட்டாக், ஹேக் செய்து விபத்தை ஏற்படுத்துதல் போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஏற்படுத்தப்பட்ட செயற்கை விபத்தாககூட இது இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சமூக சேவகர் ராஜ்குமார் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முப்படையின் சார்பில், விமானப்படை ஏர் மார்ஷல் மன்வேந்தர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக குன்னூர் வந்த அவர், விபத்து நடந்த பகுதியை பார்வையிட்டு, விசாரணையை தொடங்கியுள்ளார். அதேநேரத்தில், விபத்து குறித்து நீலகிரி மாவட்ட கூடுதல் எஸ்பி முத்துமாணிக்கம் தலைமையில் தமிழக போலீஸாரும் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x