Published : 08 Dec 2021 04:07 AM
Last Updated : 08 Dec 2021 04:07 AM
ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர் களுக்கு வாசனை, ருசியை உணர்வதில் எந்த பாதிப்பும் இல்லை என்றும், அறிகுறிகள் கூட லேசானதாகவே இருக்கிறது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, மகராஷ்டிரா தலைநகர் மும்பையில் மேலும் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது இந்தியா, அமெரிக்கா, உட்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதனால் உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்தியாவை பொறுத்தவரை, இதுவரை 23 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு அங்குள்ள சவாய் மன் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், அவர்களின் தற்போதைய நிலைமை குறித்து அந்த மருத்துவமனையின் முதல்வர் சுதிர் பண்டாரி கூறியதாவது:
கரோனா இரண்டாவது அலையை உருவாக்கிய டெல்டா வகை வைரஸை ஒப்பிடும்போது, ஒமைக்ரானால் ஏற்படும் பாதிப்புகள் முற்றிலுமாக வித்தியாசமாக உள்ளன. டெல்டா வகை கரோனா, மனிதர்களின் நுரையீரலில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் போன்றவை ஏற்பட்டன. ஆனால், ஒமைக்ரானை பொறுத்தவரை நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அதனால் அவர்களுக்கு சுவாசக் கருவிகளும் தேவைப்படவில்லை. அறிகுறிகள் கூட மிக லேசானதாகவே இருக்கின்றன. டெல்டாவை போல சுவை, வாசனை இழப்பு ஆகிய அறிகுறிகள் ஒமைக்ரான் நோயாளிகளிடம் காணப்படவில்லை. ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 9 பேரும் தற்போது குணமாகி வருகின்றனர். இருந்தபோதிலும், ஒமைக்ரானின் மிக வேகமாக பரவும் தன்மை கவலையளிக்கிறது. இவ்வாறு கூறினார்.
இதனிடையே, மும்பையில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். தென்னாப்ரிக்காவின் ஜோஹன்னஸ் பர்க்கில் இருந்து வந்த 37 வயதான ஒருவருக்கும் அமெரிக்காவில் இருந்து வந்த 36-வயதான அவரது நண்பருக்கும் ஒமைக்ரான் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருவரும் பைசர் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்களுடன் சேர்த்து மகாராஷ்டிராவில் மொத்தம் 10 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்துக்கு திரும்பிய 295 பேரில் 100-க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. தானேவின் கல்யாண் டோம்விலி மாநகராட்சிப் பகுதியில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 295 பேரில் 100-க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. இவர்களில் பலரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டுள்ளது. சிலரது முகவரியில் வீடுகள் பூட்டிக் கிடப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT