

அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல் வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டனர்.
கடந்த டிசம்பர் 1-ம் தேதி நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாலேயே தேர்வு செய்யப்படுவர் என்றும், ஒற்றை வாக்கு மூலம் இணைந்தே தேர்வு செய்யப்படுவர் என்றும் சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.
இதையடுத்து இரு பதவிகளுக்கும் டிச.7-ல் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனுக்கள் டிச.3, 4 தேதிகளில் பெறப்பட்டன. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பழனிசாமி இருவரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
வேறு யாரும் மனு செய்யாததால் அவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையரான சி.பொன்னையன் நேற்று மாலை அறிவித்தார். அதைத் தொடர்ந்து, ஓபிஎஸ், பழனிசாமி இருவரும் பரஸ்பரம் பொன்னாடை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். அப்போது அதிமுக அலுவலகத்துக்கு வெளியே தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர்.
அதைத் தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது நினைவிடங்களில் ஓபிஎஸ், பழனிசாமி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
டிச. 9-ல் ஆர்ப்பாட்டம்
வாட் வரியைக் குறைத்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நெற்பயிர் இழப்புக்கு ஹெக்டேருக்கு ரூ.40 ஆயிரம், மறுசாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும்.
பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர் களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். அம்மா மினி கிளினிக்கை மூடக் கூடாது, தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக சார்பில் டிச. 9-ம் தேதி காலை 10 மணி அளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அறிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர்.