Published : 07 Dec 2021 03:06 AM
Last Updated : 07 Dec 2021 03:06 AM
நாகாலாந்தில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டதற்கு நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருத்தம் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக மேஜர் ஜெனரல் தலைமையில் ராணுவ நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மியான்மர் எல்லையை ஒட்டிய நாகாலாந்தின் மோன் மாவட்ட பகுதியில் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த சிலர் வாகனத்தில் செல்வதாக ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவ வீரர்கள் கடந்த 4-ம் தேதி இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உளவாளிகள் கூறிய அடை யாளங்களுடன் வாகனம் ஒன்று அந்த வழியாக வந்தது. அந்த வாகனத்தை ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், வாகனம் நிற்காமல் அதிவேகமாக சென்றது.
சந்தேகமடைந்த ராணுவ வீரர்கள், தீவிரவாதிகள் தப்பிச் செல்வதாக நினைத்து அந்த வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில், வாகனத்தில் இருந்த 6 பேர் உயிரிழந்தனர். சிலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள சுரங்கத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் என்பதும் தீவிரவாதிகள் இல்லை என்பதும் பின்னர் தெரியவந்தது.
ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் நாகாலாந்தின் பல பகுதிகளில் கலவரம் வெடித்தது. வன்முறை சம்பவங்களில் பொதுமக்கள் ஈடுபட்டனர். ராணுவத்தினரின் வாகனங்கள், முகாம் கள் எரிக்கப்பட்டன. வன்முறையில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 பேர் கொல்லப்பட்டனர். மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவுவதால் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இந்நிலையில், நாகாலாந்து துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அறிக்கை அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவலின் அடிப்படையில் ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது. தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ள பகுதியில் சந்தேகப்படும்படி சென்ற வாகனத்தை நிறுத்துமாறு ராணுவத்தினர் கூறினர். ஆனால், அந்த வாகனம் நிற்காமல் சென்றது. இதையடுத்து, நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர். காயமடைந்த 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதன்பின் நடந்த கலவரத்தையடுத்து நடந்த துப்பாக்கிச் சூட்டிலும் சிலர் கொல்லப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு மத்திய அரசு வருத்தமும் ஆழ்ந்த இரங்கலும் தெரிவிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும். துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு ஒரு மாதத்துக்குள் விசாரணையை நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நாகாலாந்து மாநில அரசுடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் இருந்து நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது. அங்கு பதற்றம் நிலவி வந்தாலும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இதுபோன்ற சம்பவம் இனி எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.
மக்களவையில் அமித் ஷா அறிக்கையை படித்துவிட்டு அமர்ந்த பிறகு, இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி அவைக்கு வந்து பதிலளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் கோஷமிட்டனர். இதேபோல, நாகாலாந்து சம்பவம் குறித்து மாநிலங்களவையிலும் அமித் ஷா அறிக்கையை படித்தார்.
ராணுவ நீதிமன்றம் விசாரணை
17 பேர் உயிரிழப்பு?
இதனிடையே, நாகாலாந்தில் நேற்று பல்வேறு அமைப்புகள் சார்பில் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நாகாலாந்து மாணவர் கூட்டமைப்பு 5 நாட்கள் துக்க தினமாக அறிவித்துள்ளது. ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் உயிரிழந்ததாக கொன்யாக் யூனியன் என்ற பழங் குடியினத்தவரின் தலைமை அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால், 14 பேர் மட்டுமே இறந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT