Published : 05 Dec 2021 04:06 AM
Last Updated : 05 Dec 2021 04:06 AM

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் உலக நாடுகள் - இந்தியா உட்பட 38 நாடுகளில் ஒமைக்ரான் : வைரஸ் பரவலால் உயிரிழப்பு இல்லை என உலக சுகாதார நிறுவனம் தகவல்

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட 38 நாடுகளுக்கு

ஒமைக்ரான் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள் ளது. இருந்தபோதிலும், இந்த வைரஸால் இதுவரை உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்பதால் மக்கள் பீதியடைய தேவையில்லை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ம் தேதி புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருவதாக அந்நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து இஸ்ரேல், பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் இந்த வகை கரோனா பரவியிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில், இரண்டு முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களையும் இந்த வைரஸ் தாக்குவது கண்டறியப் பட்டது. இந்த வைரஸுக்கு உலக சுகாதார நிறுவனம் ‘ஒமைக்ரான்’ எனப் பெயரிட்டது. முந்தைய கரோனா வகைகளை விட வேகமாக பரவுவதாலும், வீரியமிக்கதாக இருப்பதாலும் ஒமைக்ரானை ‘கவலைக்குரிய வைரஸ்’ என உலக சுகாதார நிறுவனம் வகைப் படுத்தியது.

இதனிடையே, உலக நாடுகள் பலவற்றில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தென்னாப்பிரிக்கா, நார்வே, பிரிட்டன், கானா ஆகிய நாடுகளில் இதன் பரவல் அதிக மாக உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, இதுவரை 3 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. இந்த புதிய வகை கரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் (அவசரகால) இயக்குநர் மைக்கெல் ரயான் கூறியதாவது:

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, இந்தியா, நெதர்லாந்து, டென்மார்க், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, ஜப்பான், ஸ்வீடன் உட்பட 38 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் இருப்பது உறுதியாகியுள்ளது. எனினும், இந்த வைரஸால் இதுவரை உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதாக தரவுகள் கிடைக்கவில்லை. ஆனால், இப்போதைய சூழலில் கிடைக்கும் தகவல்களை கொண்டு எந்த முடிவுக்கும் நம்மால் வர முடியாது. சில வாரங்கள் கடந்த பிறகே, இந்த வைரஸ் எவ்வளவு வீரியமிக்கது; உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடியதா; தடுப்பூசிகளுக்கு கட்டுப்படக் கூடியதா என்பது தெரியவரும். ஆனால், ஒமைக்ரான் பரவலின் வேகத்தை பார்க்கும் போது இன்னும் சில மாதங்களில் ஐரோப்பாவில் பாதி மக்கள்தொகையை இந்த வைரஸ் தாக்கிவிடும் என தோன்றுகிறது. எனவே, அனைத்து நாடுகளையும் சேர்ந்த மக்கள் ஒமைக்ரான் பரவலில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு மைக்கெல் ரயான் கூறினார்.

‘பீதியடைய வேண்டாம்’

இதனிடையே, ஒமைக்ரான் வைரஸ் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றின் சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் பங்கேற்று அவர் பேசியதாவது:

கரோனா வைரஸ் வகைகளில் ஆதிக்கம் செலுத்தும் வகையாக ஒமைக்ரான் மாறலாம். அது தீவிரமான வகையாக மாறுமா என்பதை இப்போதே கணிக்க முடியாது. உலக அளவில் 99 சதவீத கரோனா தொற்றுக்கு டெல்டா வகை காரணமாக உள்ளது. ஒமைக்ரான் வேகமாக பரவக் கூடியதாக உள்ளது. தென்னாப்பிரிக்காவில் தினசரி புதிய பாதிப்பு இரட்டிப் பாகிறது.

நாம் தயாராகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். அதே சமயத்தில், பீதி அடைய வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், ஓராண்டுக்கு முன்பு இருந்த சூழ்நிலையிலிருந்து நாம் முற்றிலுமாக மாறுபட்டுள்ளோம். முந்தைய நோய்தொற்றிலிருந்து கிடைத்த இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டு இதை நாம் கடந்து செல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

தடுப்பூசிகள் நமக்கு பாது காப்பை வழங்குகின்றன. அவை தொடர்ந்து பாதுகாப்பை வழங்கும் என நம்புகிறோம். ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளை மேம்படுத்த வேண்டுமா என இப்போது கூற முடியாது. கூடுதலாக ஒரு பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வது போதுமானதாக இருக்கலாம். வேறு தடுப்பூசி இதற்கு தேவைப்படாமலும் போகலாம்.

ஒமைக்ரானுக்கு புதிய வகை தடுப்பூசி தேவையா என்பது குறித்து உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு ஆராய்ந்து வருகிறது. குறிப்பிட்ட வயது பிரிவினர் மற்றும் எளிதில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளவர்களுக்கு கூடுதல் டோஸ் பரிந்துரைப்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.

ஒமைக்ரான் வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டாலும் அது அங்குதான் தோன்றியது என உறுதியாக கூற முடியாது. ஏனென்றால் அதனை கண்டறியும் வசதி தென்னாப்பிரிக்காவில் இருப்பதுபோல் பல நாடுகளில் இல்லை. தென்னாப்பிரிக்காவை குறிவைத்து விமானப் பயணத் தடை விதித்திருப்பது நியாயமற்றது. இதுபோன்ற தடைகள் பாதிப்பை கொஞ்சம் தள்ளிப்போட மட்டுமே உதவும். இதற்கு பதிலாக மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். தடுப்பூசி பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு சவுமியா சுவாமி நாதன் பேசினார்.

மும்பை நபருக்கு உறுதி

மும்பையைச் சேர்ந்த 33 வயது நபர் அண்மையில் தென்னாப் பிரிக்காவின் கேப்டவுன் நகருக்கு சென்றுவிட்டு, கடந்த 24-ம் தேதி துபாய் வழியாக மும்பைக்கு திரும்பினார். அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து எந்த வகையான வைரஸால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறித்து மரபணு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ஒமைக் ரான் வைரஸால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரும் அவரோடு தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவரோடு விமானத்தில் பயணம் செய்தவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x