

தமிழகத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய குழுவினர், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். வெள்ள பாதிப்பு நிவாரணம் மற்றும் சீரமைப்புக்காக மொத்தமாக ரூ.4625.80 கோடி நிதியை மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கால் குடியிருப்புகளை நீர் சூழ்ந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். மேலும், ஐ.பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் குழுவை அமைத்து, டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களை கணக்கெடுக்க உத்தரவிட்டார். அதன்படி, அமைச்சர்கள் குழு ஆய்வு செய்து, முதல்வரிடம் அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட கோரிக்கை மனுவை, டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு வழங்கினார். தமிழகத்துக்கு மழையால் பாதிப்படைந்த கட்டமைப்புகளை சீரமைக்க ரூ.2,629 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, மழை பாதிப்புகளை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக மத்திய உள்துறை இணை செயலர் ராஜிவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அனுப்பியது. இவர்கள் கடந்த 21-ம் தேதி சென்னை வந்து, தலைமைச் செயலர் வெ.இறையன்புவை சந்தித்து ஆலோசித்தனர். பின்னர், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மழை பாதிப்பு குறித்த புகைப்படங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதைத் தொடர்ந்து மத்திய குழுவினர் 2 பிரிவாக பிரிந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ஆய்வு செய்யச் சென்றனர். ராஜிவ் சர்மா தலைமையில் 4 பேர், 22-ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆய்வு நடத்திவிட்டு புதுச்சேரி சென்றனர். 23-ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி பகுதிகளில் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மற்றொரு குழுவினர், கன்னியாகுமரிக்கு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். அதன்பின், நேற்று முன்தினம் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஆய்வு நடத்திவிட்டு சென்னை திரும்பினர்.
இரண்டு நாள் ஆய்வுப் பணியை முடித்த மத்திய குழுவினர், ராஜிவ் சர்மா தலைமையில் காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்துக்கு வந்தனர். முதலில் தலைமைச் செயலரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதன்பின் 10.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மழை பாதிப்பு, கணக்கெடுப்பு உள்ளிட்டவை குறித்து விவாதித்தனர். அப்போது, பாதிப்பு குறித்து ஆய்வு செய்த பகுதிகள், சேத விவரங்கள் குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து மத்திய குழுவினர் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.
தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியில் வந்த மத்திய குழுவினர், செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்தனர். இருப்பினும், மத்திய குழுவின் உறுப்பினரான வேளாண்துறை இயக்குநர் (ஐடி) விஜய் ராஜ்மோகன் கூறும்போது, ‘‘மழை பாதிப்பு பகுதிகளை முழுமையாக ஆய்வு செய்துள்ளோம். விரைவில் மத்திய அரசிடம் அறிக்கை அளிப்போம்’’ என்றார்.
இதனிடையே, தமிழக வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரணத்துக்காக மத்திய அரசிடம் மொத்தமாக ரூ.4625 .80 கோடியை தமிழக அரசு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அக்டோபர், நவம்பர் மாதங்களில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பெய்த கனமழையால் தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க முதல்கட்ட மதிப்பீடாக ரூ.549.63 கோடியும், நிரந்தரமாக சீரமைக்க ரூ.2079.86 கோடியும் என மொத்தம் ரூ.2629.29 கோடியை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கும்படி மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்ட பிறகு, கணக்கெடுக்கப்பட்ட கூடுதல் சேத விவரங்களின்படி தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்கு ரூ.521.28 கோடியும், நிரந்தரமாக சீரமைக்க ரூ.1,996.50 கோடியும் தேவைப்படும் என்று கணக்கிடப் பட்டுள்ளது.
ஏற்கெனவே, மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட முதல்கட்ட அறிக்கையில் கோரப்பட்டுள்ள தொகை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள சேதங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக ரூ.1,070.92 கோடியும், நிரந்தரமாக சீரமைக்க ரூ.3,554.88 கோடியும் என மொத்தம் ரூ.4,625.80 கோடி வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய குழுவினர் தங்களது அறிக்கையை அளித்த பிறகு, நிவாரணத் தொகையை மத்திய அரசு வழங்கும் என எதிர்பார்க் கப்படுகிறது.