Published : 04 Nov 2021 03:11 AM
Last Updated : 04 Nov 2021 03:11 AM

முதல்வர்கள், 48 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை - வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்த வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தல்

தமிழகம் உட்பட நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்டுள்ள 48 மாவட்ட ஆட்சியர்கள், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அறிவுறுத்தினார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை மொத்தம் 107 கோடி டோஸுக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனினும், முதல் டோஸ் மற்றும் 2-வது டோஸ் தடுப்பூசிக்கு இடையிலான கால இடைவெளி முடிந்த பின்னரும் சுமார் 10.34 கோடி பேர் இன்னமும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை.

மேலும், நாடு முழுவதும் 48 மாவட்டங்களில் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 50 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண் டவியா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜி-20 உச்சி மாநாடு மற்றும் ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளிநாடு களுக்கு சென்றிருந்த பிரதமர் மோடி, நேற்று அதிகாலை நாடு திரும்பினார். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்டுள்ள 48 மாவட்ட ஆட்சி யர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி மூலம் கலந்துரையாடினார். இந்த மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு, ஜார்க்கண்ட், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் ஆலோசனையில் பங்கேற்றனர். இதில் பிரதமர் மோடி பேசியதாவது:

இதுவரை பொதுமக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டன. இனிமேல் சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். குறிப்பாக 2-வது டோஸுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். 2-வது டோஸுக்கான அவகாசம் முடிந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும். இலவச தடுப்பூசி திட்டத்தின்கீழ் அதிகபட்சமாக ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசி செலுத்தினோம். இது நம் நாட்டின் திறமையை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

இதே உத்வேகத்துடன் இனி, வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்த வேண்டும். ஒவ்வொரு கிராமம், நகரம் என அனைத்து பகுதியிலும் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக ஒவ்வொரு கிராமத்திலும் வெவ்வேறு உத்திகளைக்கூட பயன்படுத்தலாம். 25 பேர் அடங்கிய குழுக்களை அமைத்து இதை செயல்படுத்தலாம். தேசிய மாணவர் படை மற்றும் என்எஸ்எஸ் அமைப்புகளின் உதவியையும் நாடலாம்.

தடுப்பூசி தொடர்பாக சில வதந்திகள் பரப்பப்படுகின்றன. இதனால் பொதுமக்களில் சிலர் குழப்பத்தில் உள்ளனர். அவர்களுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, மக்கள் மத்தியில் பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளூர் மதத் தலைவர்களின் உதவியை நாடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நோயையும் எதிரிகளையும் எப்போதும் குறைத்து மதிப்பிடக் கூடாது. இறுதிவரை அவற்றுக்கு எதிராக போராட வேண்டியது அவசியம். எனவே, இந்த விவகாரத்தில் மெத்தனமாக இருக்கக் கூடாது. தடுப்பூசி திட்டம் இந்த அளவுக்கு வெற்றி பெற்றது உங்களுடைய கடின உழைப்பால்தான். நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையில் உள்ளவர்களின் பங்கு பாராட்டுக்குரியது. எனினும், தொடர்ந்து இதே உத்வேகத்தில் செயல்படாவிட்டால் புதிய சிக்கல் உருவாகும். இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x