Published : 28 Oct 2021 03:06 AM
Last Updated : 28 Oct 2021 03:06 AM

பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்த்த புகார் குறித்து ஆய்வு செய்ய - தொழில்நுட்ப நிபுணர் குழு அமைப்பு : ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பில் செயல்பட உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி

‘பெகாசஸ்’ மென்பொருள் மூலம் உளவு பார்த்ததாக எழுந்துள்ள புகார் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பில் ஆய்வு செய்ய தொழில்நுட்ப நிபுணர் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் தயாரித்த ‘பெகசாஸ்’ உளவு மென்பொருளை பயன்படுத்தி, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அரசுகள், முக்கிய பிரமுகர்களின் செல்போன்களை உளவு பார்த்ததாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. குறிப்பாக, இந்தியாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட முக்கியப் பிரமுகர்களின் செல்போன்கள் உளவுபார்க்கப்பட்டதாக தகவல் வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர்கள் ‘இந்து’ என்.ராம், சசி குமார், எடிட்டர்ஸ் கில்டு மற்றும் சில தனி நபர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ‘மத்திய அரசுஉளவு பார்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை’ என தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் சொலிசிட்டர்ஜெனரல் துஷார் மேத்தா, “இந்த விவகாரம் தேச பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது என்பதால் இதுதொடர்பான விவரங்களை பிரமாணப் பத்திரத்தில் விரிவாக தாக்கல் செய்யவிரும்பவில்லை” என்றார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், தலைமை நீதிபதிஎன்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனுக்கள் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: பெகாசஸ் உளவு விவகாரத்தை உலகின் பல நாடுகள் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளன. இதுதொடர்பான உண்மையை வெளிக்கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. எனவே, இந்த விவகாரத்தில் அமைதியாக இருக்க முடியாது.

உளவு பார்ப்பது குடிமக்களின் கருத்து சுதந்திரம் மற்றும் அந்தரங்க உரிமையை பாதிக்கும் வகையில் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இத்தகைய புகார்களை புறக்கணித்துவிட்டு நீதிமன்றம் அமைதியாக இருக்க முடியாது.

பெகாசஸ் மென்பொருள் மூலம்உளவு பார்த்ததாக கூறப்படும் புகார்உண்மையா, இல்லையா என்ற கேள்விக்கு மத்திய அரசிடமிருந்து தெளிவான பதில் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் வெறும் 2 பக்கபிரமாண பத்திரத்தை தாக்கல் செய்த மத்திய அரசு, விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மறுத்துவிட்டது. விரிவான அறிக்கை தாக்கல் செய்தால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்ற மத்திய அரசின் வாதம் ஏற்கக் கூடியதல்ல.

தொழில்நுட்பம் என்பது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆனால், அது தனி நபரின் அந்தரங்க உரிமை,கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக இருக்கக் கூடாது. அந்தரங்க உரிமை, கருத்து சுதந்திரம் என்பதுகுடிமக்களின் அடிப்படை உரிமை.ஊடகங்களின் கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் அரசின் நடவடிக்கைகள் இருக்கக் கூடாது.

எனவே, பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்த்ததாக எழுந்துள்ள புகார் குறித்து ஆய்வு செய்ய சுதந்திரமான தொழில்நுட்ப நிபுணர் குழு அமைக்கப்படுகிறது. இக்குழுவை ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் கண்காணிப்பார். விரைவாக ஆய்வுசெய்து அறிக்கையை தாக்கல் செய்ய இக்குழுவுக்கு உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை 8 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அலோக் ஜோஷி, சர்வதேச மின்னணு தொழில்நுட்ப ஆணைய துணைக் குழு தலைவர் சந்தீப் ஓபராய் ஆகியோர் நீதிபதி ரவீந்திரனுக்கு உதவியாக இருப்பார்கள்.

குஜராத்தில் உள்ள தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழக முதல்வர் நவீன் குமார் சவுத்ரி(இணைய பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தடயவியல்), கேரளாவில் உள்ள அமிர்தா விஷ்வ வித்யாபீடத்தின் பொறியியல் கல்லூரி பேராசிரியர் பிரபாகரன், மும்பை ஐஐடி கணினி அறிவியல் துறை பேராசிரியர் அஷ்வின் அனில் குமஸ்தே ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாக இருப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன ஆய்வு

இந்தியர்களின் செல்போன் அல்லது இதர கருவிகளில் உள்ளதகவலை பார்க்கவோ, உரையாடலை ஒட்டு கேட்கவோ பெகாசஸ்மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தியதால் பாதிக்கப்பட்ட நபர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும்.

கடந்த 2019-ம் ஆண்டு பெகாசஸ்மூலம் இந்தியர்கள் சிலரின் வாட்ஸ்-அப் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? மத்திய, மாநில அரசுகள், அரசு அமைப்புகள் சார்பில் பெகாசஸ் மென்பொருள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வுசெய்ய வேண்டும்.அரசு அமைப்புகள் பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி இருந்தால், எந்த சட்டம் அல்லது விதிகளின்கீழ் என்ற விவரங்களை சேகரிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x