Published : 28 Oct 2021 03:06 AM
Last Updated : 28 Oct 2021 03:06 AM

‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் மூலம் - லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றப் போகிறோம் : திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

மரக்காணம் அருகே முதலியார்குப்பத்தில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்கள் கல்வி கற்பதை பார்வையிட்டார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் க.பொன்முடி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கே.எஸ்.மஸ்தான், விழுப்புரம் ஆட்சியர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழுப்புரம்

‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக பள்ளிக் குழந்தைகளின் கற்றலில் ஏற்பட்டுள்ள இடைவெளியை சரிசெய்யும் நோக்கில்,எஸ்எஸ்ஏ சார்பில், ‘இல்லம் தேடிகல்வி’ என்ற திட்டம் ரூ.200 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே முதலியார்குப்பத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

கல்விப் புரட்சிக்கு, மறுமலர்ச்சிக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ‘மற்ற திட்டங்களைப் போல இதுவும் ஒரு திட்டம்’ என இதை சொல்லிவிட முடியாது. இத்திட்டம்தான் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகளின் வாழ்வில்ஒளியேற்றப் போகிறது. நூற்றாண்டு காலமாக மறுக்கப்பட்ட கல்வியை திண்ணை பள்ளிக்கூடங்கள் வழியாக கொண்டு சேர்த்ததுஆரம்பகால திராவிட இயக்கம்தான். ‘திராவிடம்’ என்றால் என்ன என்று கேட்கும் கோமாளிகளும், அதைப் பற்றி அறியாதவர்களும் இதுதான் திராவிடத்தின் கொள்கை என்பதை மறந்து விடக்கூடாது.

நீதிக் கட்சி தோன்றிய பிறகுசென்னை மாகாணத்தில் இருக்கக்கூடிய மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு உணவளிக்க கூடிய திட்டத்தை கொண்டு வந்தனர். அதைத் தொடர்ந்து மறைந்தகாமராஜர், எம்ஜிஆர், கருணாநிதிமூலம் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இது போன்றதொரு‌ சிறப்புமிக்க திட்டம்தான் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம்.

நாள்தோறும் மாலை நேரங்களில் வீடு தேடி வந்து கல்வி கற்பிக்கும் முறைதான் இந்த திட்டத்தின் நோக்கம். இது மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கப் போகிறது. இத்திட்டத்துக்காக ஓய்வுபெற்ற ஆசிரியர்களை வரவேற்கிறேன். தன்னார்வலர்கள், படித்த இளைஞர்கள் தங்களை இந்த திட்டத்தில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநில முதல்வர்களை ஒப்பிட்டு பத்திரிகை மற்றும் தனியார் நிறுவனங்கள் எனக்குஒரு மதிப்பெண் கொடுத்திருக்கின்றனர். ‘முதல்வர்களில் நம்பர்ஒன் மு.க.ஸ்டாலின்’ என்று போடுகின்றனர். என்னை பொறுத்தவரை ‘முதல்வர் நம்பர் ஒன்’ என்பதை விட ‘தமிழ்நாடு நம்பர் ஒன்’ என்று சொல்வதையே விரும்புகிறேன்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் க.பொன்முடி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கே.எஸ்.மஸ்தான், விழுப்புரம் ஆட்சியர் மோகன்,பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லியோனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x