Published : 26 Oct 2021 03:06 AM
Last Updated : 26 Oct 2021 03:06 AM
தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருதை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார். இந்த விருதை மறைந்த இயக்குநர் பாலசந்தருக்கு அர்ப்பணிப்பதாக ரஜினி நெகிழ்ச்சியுடன் கூறினார்.
சிறந்த நடிகர் விருது தனுஷுக்கும், துணை நடிகர் விருது விஜய் சேதுபதிக்கும், சிறப்பு நடுவர் தேர்வு விருது பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்துக்கும், சிறந்த இசையமைப்பாளர் விருது இமானுக்கும் வழங்கப்பட்டது.
2019-ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான 67-வது தேசிய திரைப்பட விருதுகள், கடந்த மார்ச் 22-ம் தேதி அறிவிக்கப்பட்டன. மேலும், இந்திய அரசின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, ரஜினிக்கு வழங்கப்படும் என ஏப்ரல் 1-ம் தேதி அறிவிக்கப்பட்டது. கரோனா பரவல் காரணமாக விருது விழா நடத்தப்படாமல் இருந்தது.
இந்நிலையில், தாதா சாகேப் பால்கே விருது மற்றும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடந்தது. விருதுகளை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார். மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர், இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.
சிறந்த நடிகருக்கான விருதை, ‘அசுரன்’ படத்துக்காக தனுஷும், ‘போஸ்லே’ இந்தி படத்துக்காக மனோஜ் பாஜ்பாயும் பகிர்ந்துகொண்டனர். ‘மணிகர்ணிகா’, ‘பாங்கா’ படங்களில் சிறப்பாக நடித்ததற்காக கங்கணா ரணாவத்துக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது. சிறந்த இந்தி படத்துக்கான விருது, மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான ‘சிச்சோரே’ படத்துக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை இயக்குநர் நிதீஷ் திவாரி, தயாரிப்பாளர் சாஜித் நாடியாவாலா இருவரும் பெற்றுக்கொண்டனர்.
‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகர் விருது வழங்கப்பட்டது. பார்த்திபன் இயக்கி நடித்த ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்துக்கு சிறப்பு நடுவர் தேர்வு விருது வழங்கப்பட்டது. அதே படத்தில் சிறந்த ஒலியமைப்புக்கான விருதை ரசூல் பூக்குட்டி பெற்றார். ‘கேடி (எ) கருப்புதுரை’ படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது வழங்கப்பட்டது. ‘விஸ்வாசம்’ படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) விருது டி.இமானுக்கு வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து தாதா சாகேப் பால்கே விருதுக்காக ரஜினியின் பெயர் அறிவிக்கப்பட்டதும், அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர். ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருதை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார். விழாவில் ரஜினி பேசிய தாவது:
கவுரவமிக்க தாதா சாகேப் பால்கே விருதை பெறுவதில் மகிழ்ச்சி. இந்த விருதை எனக்கு வழங்கி கவுரவித்துள்ள மத்திய அரசுக்கு நன்றி. எனது வழிகாட்டி, எனது குரு கே.பாலசந்தர் சாருக்கு இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்.
ஒரு தந்தைபோல இருந்து என்னை வளர்த்தவர் எனது சகோதரர் சத்யநாராயண கெய்க்வாட். நல்ல பண்புகள், ஆன்மிகத்தை எனக்கு போதித்தவர். அவரை நினைத்துப் பார்க்கிறேன். கர்நாடகாவில் என்னுடன் பணியாற்றிய பேருந்து ஓட்டுநர், என் நண்பர் ராஜ் பகதூரை நினைத்துப் பார்க்கிறேன். நான் நடத்துநராக இருந்தபோது ராஜ்பகதூர்தான் என்னுள் இருக்கும் நடிப்புத் திறனை அடையாளம் கண்டு, திரைத் துறையில் சேர ஊக்கம் கொடுத்தார்.
எனது படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், அதில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், சக நடிகர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஊடகங்கள், என் அத்தனை ரசிகர்களையும் நினைவுகூர்கிறேன். தமிழ் மக்கள் இல்லை என்றால் நான் இங்கு இல்லை. என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி.
இவ்வாறு ரஜினி கூறினார்.
முன்னதாக, ரஜினியின் திரையுலக வாழ்க்கை பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது. அதில் அமிதாப் பச்சன், மோகன்லால், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, தயாரிப்பாளர் தாணு, குஷ்பு உள்ளிட்டோர் ரஜினியை வாழ்த்திப் பேசினர். ‘‘மிக எளிமையான பின்னணியில் இருந்து உயர்ந்து, இப்படியொரு இடத்தைப் பிடித்து ரஜினி சாதித்தது அசாதாரண விஷயம் என்பதையும் தாண்டிய ஒன்று’’ என்று புகழாரம் சூட்டினார் அமிதாப் பச்சன்.
தலைவர்கள் வாழ்த்து
விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: இந்திய திரையுலகுக்கான வியத்தகு பங்களிப்புடன் பொதுவாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும் தலைசிறந்த பண்பினால் நம் நாட்டு இளைஞர்களை கவர்ந்திழுத்தவர் நடிகர் ரஜினிகாந்த். அவர், நல்ல உடல் நலத்துடன் ஆண்டுகள் பல நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: தாதா சாகேப் பால்கே விருது பெறும் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு நெஞ்சம்நிறை வாழ்த்துகள். தமிழ்த் திரையுலகை அடுத்தகட்டத்துக்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளை பெற வேண்டும். தேசிய திரைப்பட விருதுகள் பெறும் வெற்றிமாறன், விஜய் சேதுபதி, தனுஷ், ஆர்.பார்த்திபன், இமான், நாக விஷால் ஆகியோருக்கும் எனது வாழ்த்துகள்.
முன்னாள் முதல்வர் பழனிசாமி: இந்திய திரைப்பட துறையில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்து கொண்டவர், பண்பாளர், நண்பர் ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள்.
தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை: விருது பெற்றுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அவருக்கு நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும் கொடுக்க இறைவனிடம் பிராத்திக்கிறேன்.
திமுக எம்.பி. கனிமொழி: திரைத் துறையின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது பெறும் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய விருது பெற்றுள்ள தமிழ்த் திரையுலகினர் அனைவருக்கும் வாழ்த்துகள். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்துக்கு ஸ்டாலின் தொலைபேசியிலும் வாழ்த்து தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT