Published : 18 Oct 2021 03:09 AM
Last Updated : 18 Oct 2021 03:09 AM

எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு ஓபிஎஸ், இபிஎஸ் மரியாதை - அதிமுக பொன்விழா கொண்டாட்டம் தொடக்கம் : தமிழகம் முழுவதும் தொண்டர்கள் உற்சாகம்

அதிமுகவின் பொன்விழா ஆண்டையொட்டி, சென்னையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். (அடுத்த படம்) மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திலும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். படங்கள்: க.பரத்

சென்னை

அதிமுக பொன்விழா கொண்டாட்ட தொடக்கத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாசிலைகளுக்கு கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொன்விழாவை உற்சாகாக கொண்டாடினர்.

மறைந்த முதல்வர் எம்ஜிஆர் கடந்த 1972 அக்டோபர் 17-ம் தேதி அதிமுகவை தொடங்கினார். அதிமுக தொடங்கப்பட்டு 49 ஆண்டுகள் நிறைவடைந்து, நேற்று 50-வது பொன்விழா ஆண்டு தொடங்கியது.

இதையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான ‘எம்ஜிஆர் மாளிகை’ வண்ண விளக்குகள், மலர்கள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அப்பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. காலையில் இருந்தே தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், மகளிர் அணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் வரத் தொடங்கினர்.

கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமை அலுவலகத்துக்கு காலை 10 மணிக்கு வந்தனர். அப்போது கட்சித் தொண்டர்கள், ‘எம்ஜிஆர், ஜெயலலிதா புகழ் ஓங்குக’ என்று உற்சாகத்துடன் கோஷமிட்டு அவர்களை வரவேற்றனர்.

தொண்டர்களை பார்த்து கைகூப்பி வணங்கிய ஓபிஎஸ்., இபிஎஸ் இருவரும் தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அங்கிருந்த கொடிக் கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றிவைத்து, கட்சியினருக்கு இனிப்பு வழங்கினர்.

பின்னர், அதிமுக பொன்விழா சிறப்பு மலரை ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி வெளியிட, முதல் பிரதியை கட்சியின் மூத்த தலைவர் சி.பொன்னையன் பெற்றுக்கொண்டார்.

பிறகு, கட்சிக்காக உழைத்து உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.15 லட்சம் வழங்கப்பட்டது. விழாவில், கட்சியினர் அதிமுக கொடியுடனும், இரட்டை இலை சின்னத்துடனும் பங்கேற்றனர். விழாவுக்கு வந்தவர்களுக்கு மேளதாளம், தாரை, தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

தலைமை அலுவலக நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்விலும் கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.

பிற மாநிலங்களிலும் கொண்டாட்டம்

அதிமுக பொன்விழாவை கட்சிநிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் ஏற்கெனவே கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் எம்ஜிஆர்,ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மாலை அணிவித்தும், இனிப்புகள்,அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கட்சியினர் உற்சாகத்துடன் கொண்டாடினர். பிறமாநிலங்களிலும் அதிமுக பொன்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதிமுக பொன்விழாவைஇந்த ஆண்டு முழுவதும் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அதிமுக ஏற்பாடு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x