

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலுக்கு ஒட்டுமொத்த எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் பந்த் போராட்டத்தை அறிவித்துள்ளன.
புதுச்சேரியில் கடந்த 1968 மற்றும் 2006 ஆகிய இருமுறை மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடந்துள்ளது. 2006-ல் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2011-ல் முடிவடைந்தது. அதன்பிறகு 10 ஆண்டுகளாகியும் இதுவரை தேர்தல் நடக்கவில்லை.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தொடங்கி கடந்த மாதம் தேதிகள் அறிவிக்கப்பட்டன. பின்னர்,சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி தேதிகள் ரத்து செய்யப்பட்டன.
உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டைப்போல பெண்கள், தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பெண்களுக்கு வார்டு இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக உள்ளாட்சித் தேர்தலை 3 கட்டங்களாக நடத்த தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பேரவைத் தலைவர் செல்வம் தலைமையில் அனைத்துக் கட்சிஎம்எல்ஏக்கள் கூட்டம் சனிக்கிழமை நடந்தது. அதில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் இடஒதுக்கீட்டுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும், மாநில தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம் தெரிவித்தும், ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து ஆளுநர்தமிழிசையை சந்தித்து தீர்மானங்கள் அடங்கிய மனுவை அளித்தனர்.
இதனிடையே காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, புதிய நீதிக்கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள், அமைப்புகள், இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி இன்று (அக். 11) முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தயாராகி வரும் சிலர் கூறும்போது, ‘‘அனைத்துக்கட்சி எம்எல்ஏக்களும் மக்கள் பாதிக்கக் கூடிய முக்கிய பிரச்சினைகளுக்கு இதுவரை ஒன்று கூடி முடிவு எடுத்ததில்லை. தற்போது தங்கள் அதிகாரத்தை காக்கவும், தக்க வைக்கவும் அனைவரும் ஒன்று கூடி எதிர்ப்பை பதிவு செய்கின்றனர். தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு இல்லை. ஆனால், புதுச்சேரியில் இதை வைத்து குழப்பம் உருவாக்குகின்றனர்’’ என்றனர்.
மனு தாக்கல் தொடக்கம்
உள்ளாட்சித் தேர்தல் விவகாரம் தொடர்பாக ஆளுநர் தமிழிசை, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்பார் என்று தெரிகிறது. ஆளுநரின் முடிவை எதிர்நோக்கி அனைவரும் காத்துள்ளனர்.