முந்திரி ஆலை தொழிலாளி கொலை - கடலூர் திமுக எம்.பி.யிடம் சிபிசிஐடி விசாரணை? :
முந்திரி தொழிற்சாலை தொழிலாளி கொலை வழக்கு தொடர்பாக கடலூர் திமுக எம்.பி.யிடம் சிபிசிஐடிபோலீஸார் விசாரணை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடலூர் மக்களவைத் தொகுதி திமுக எம்.பி.யாக இருப்பவர் டி.ஆர்.வி.ரமேஷ். இவருக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை, பண்ருட்டி அருகே பனிக்கன்குப்பத்தில் உள்ளது.இந்த தொழிற்சாலையில் மேலமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராசு (55) என்பவர் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 19-ம் தேதி கோவிந்தராசு மர்மமான முறையில் உயிரிழந்தார்.
பாமக மறியல்
இந்நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீஸார், திமுக எம்.பி. ரமேஷ் மற்றும் அவரது உதவியாளர் நடராஜன் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களில் ரமேஷ் தவிர 5 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இதனால், எம்.பி.ரமேஷூம் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சென்னையில் உள்ள எம்.பி., ரமேஷிடம் சிபிசிஐடிபிரிவின் ஒரு குழுவினர் விசாரணை நடத்தி வருவதாக நேற்று தகவல்கள் வெளியாகின. ஆனால், சிபிசிஐடி போலீஸார் தரப்பில் அந்த தகவலை உறுதிபடுத்தப்படவில்லை.
