Published : 13 Aug 2021 03:15 AM
Last Updated : 13 Aug 2021 03:15 AM

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாஸ்போர்ட், வங்கிக் கணக்கு முடக்கம் : லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடவடிக்கை

லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனையைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வங்கிக் கணக்கு, பாஸ்போர்ட்டை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தனது பதவிக்காலத்தில் சட்ட விதிகளை மீறி நெருக்கமான நிறுவனங்களுக்கு, பலகோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை கொடுத்ததாகவும், இதில் ஊழல் நடந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் எஸ்.பி.அன்பரசன், கேசிபி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கே.சந்திர பிரகாஷ், அந்நிறுவன இயக்குநர் ஆர்.சந்திர பிரகாஷ், எஸ்பி பில்டர்ஸ் உரிமையாளர் ஆர்.முருகேசன், ஜேசு ராபர்ட் ராஜா, சி.ஆர்.கன்ஸ்ட்ரக் ஷன் உரிமையாளர் கு.ராஜன் உள்ளிட்டோர் மற்றும் 10 நிறுவனங்கள் மீது கூட்டுச்சதி, மோசடி, ஊழல் உள்ளிட்ட 7 பிரிவுகளின்கீழ் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து, கடந்த 10-ம்தேதி கோவை சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். வேலுமணி வீடு, அவரது உறவினர்களின் வீடுகள், நெருக்கமான இடங்கள் எனகோவையில் 42 இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைநடத்தப்பட்டது. கோவை பீளமேட்டில் உள்ள கேசிபி நிறுவனத்தின் அலுவலகம், கருஞ்சாமி கவுண்டம்பாளையத்தில் உள்ளவிஎஸ்ஐ எம்-சாண்ட் குவாரி,திருப்பூர் மாவட்டம் பச்சாபாளையத்தில் உள்ள கேசிபி நிறுவன அலுவலகம் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று முன்தினம் 2-வது நாளாக சோதனை நடத்தினர்.

பீளமேட்டில் உள்ள கேசிபி நிறுவனத்தின் 7, 9-வது தளங்களில் நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு கூடுதல் எஸ்பிதிவ்யா தலைமையிலான போலீஸார் சோதனையை தொடங்கினர். இரவு 9.30 மணிக்கு சோதனை முடிந்தது. சுமார் 14 மணி நேரம் நடந்த சோதனையின்போது, அலுவலக கணினியில் உள்ள தகவல்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும், எந்தெந்த திட்டப் பணிகள், எந்தெந்த பெயரில் எடுக்கப்பட்டன போன்ற விவரங்களை பதிவு செய்து சென்றனர். விஎஸ்ஐ எம்-சாண்ட் குவாரியிலும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி வரை சோதனை நடந்தது. இங்கிருந்து 2 பைகளில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

ஆவணங்கள் ஆய்வு

எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் ஏராளமான சொத்து ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள், பணப் பரிவர்த்தனை ஆதாரங்கள், வங்கிக் கணக்கு ஆவணங்கள், ரூ.2 கோடி வைப்பு நிதி ஆவணம், வங்கி லாக்கர் சாவிகள், ரூ.13 லட்சம் பணம் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.

வங்கிக் கணக்கு, லாக்கர்கள்

இந்த ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கையை போலீஸார் மேற்கொண்டுள்ளனர். அதன்படி, வேலுமணியின் வங்கிக் கணக்கு, லாக்கர்கள் ஆகியவற்றை போலீஸார் நேற்று முடக்கி வைத்தனர். குறிப்பாக ரூ.2 கோடி வைப்பு நிதி வைக்கப்பட்டிருந்த வங்கிக் கணக்கை முடக்கி வைத்துள்ளனர்.

மேலும், வேலுமணி வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் அவரது பாஸ்போர்ட்டையும் முடக்கி வைத்திருப்பதாக லஞ்சஒழிப்பு போலீஸார் தெரிவித்துள்ளனர். சோதனையின்போது சிக்கிய அனைத்து நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளையும் முடக்கி வைப்பதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x