Published : 13 Jul 2021 03:13 AM
Last Updated : 13 Jul 2021 03:13 AM

எந்தச் சூழலிலும் தமிழக அரசு ஏற்காது என முதல்வர் உறுதி - மேகேதாட்டு அணைக்கு அனுமதி தரக் கூடாது : மத்திய அரசை வலியுறுத்தி அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு தலைமை தாங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின். அருகில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

சென்னை

மேகேதாட்டு அணை விவகாரம் தொடர் பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத் தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு கண்டனம் தெரிவிப்பது, அனைத்துக் கட்சி தலைவர்களும் நேரில் சென்று மத்திய அரசிடம் வலியுறுத்துவது உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பேசிய முதல்வர், ‘மேகே தாட்டு அணையை எந்தச் சூழலிலும் அனுமதிக்க மாட்டோம்; அதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது’ என்றார்.

மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டப் பேரவையில் இடம் பெற்றுள்ள அனைத் துக் கட்சிகளின் தலைவர்கள் ஆலோ சனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் (திமுக), டி.ஜெயக்குமார், மனோஜ் பாண்டியன் (அதிமுக), நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி (பாஜக), கே.எஸ்.அழகிரி, கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி, எஸ்.பி.வெங்கடேசன் (பாமக), எம்.பூமிநாதன், கு.சின்னப்பா (மதிமுக), திருமாவளவன் (விசிக), இரா.முத்தரசன், நா.பெரியசாமி (இந்திய கம்யூனிஸ்ட்), கே.பாலகிருஷ்ணன், பி.சண்முகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்). எம்.எச்.ஜவாஹிருல்லா, ப.அப்துல்சமது (மனிதநேய மக்கள் கட்சி), தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), ரா.ஈஸ்வரன் (கொமதேக), பூவை ஜெகன் மூர்த்தி (புரட்சி பாரதம்) உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை தடுக்க தமிழக அரசு எடுக்கும் நடவடிக் கைகளுக்கு அனைத்து கட்சி தலைவர் களும் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, 3 தீர்மானங் கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

l உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி தற்போது அணை கட்டும் முயற்சிகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருவது மிகவும் கண்டனத்துக்குரியது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான இந்த முயற்சி, அரசியலமைப்புச் சட்டத்தின் மாட்சிமைக்கு விடப்படும் சவாலாகும். எனவே, கர்நாடக அரசின் இந்த திட்டத்துக்கு, இதில் தொடர்புடைய மத்திய அரசின் அமைச்சகங்கள் எவ்வித அனுமதிகளையும் வழங்கக் கூடாது என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

l அணை கட்டுவதற்கான கர்நாடக அர சின் முயற்சிகளை தடுப்பதில் தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தங்கள் ஒத்துழைப்பையும் வழங்கும்.

l முதல்கட்டமாக அனைத்துக் கட்சி யினரும் சென்று இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை மத்திய அரசிடம் வழங்குவது என்றும், அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, கூட்டத்தில் அரசின் நிலைப்பாடு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

காவிரி விவகாரத்தில் தமிழகமும், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி களும் ஒன்றுபட்ட ஒரே சிந்தனையுடன் இருக்கின்றன என்பதை கர்நாடகாவுக்கு மட்டுமல்ல; மத்திய அரசுக்கும் உணர்த்தி யாக வேண்டும். காவிரி உரிமைக்காக நாம் பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

வழக்கமான காலத்திலேயே நமக்கு தரவேண்டிய நீரை கர்நாடகம் வழங்கு வதில்லை. காவிரி என்பது கர்நாடகத் துக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கும் முழு உரிமை உள்ளது. காவிரி இறுதித் தீர்ப்பின் மூலம் 3 வகைகளில் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்கிறது. அதில் இரண்டு பகுதிகள் ஏற்கெனவே கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. மூன்றாவதாக தமிழகத்துக்கு நேரடியாக தண்ணீர் வரும் வகையில் எந்த கட்டுப்பாடும் இல்லாத நிலை உள்ளது. தற்போது அந்த நீரையும் தடுக்கும் சதிதான் மேகேதாட்டு அணை திட்டமாகும்.

அணை கட்டுவதை கைவிடுமாறு கர்நாடக அரசுக்கு அறிவறுத்தும்படி பிரதமரிடம் நான் நேரிலும் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சரை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் சந்தித்து வலியுறுத்தினோம்.

காவிரி பிரச்சினை என்பது அரசியல் பிரச்சினை அல்ல. தமிழக மக்களின் வாழ்வுரிமை பிரச்சினை. இதில் தமிழகம் ஒரே சிந்தனையில் நிற்கிறது என்பதை நாம் காட்டியாக வேண்டும். மேகேதாட்டு அணையை எந்தச் சூழலிலும் அனுமதிக்க மாட்டோம். அதில் தமிழக அரசு உறுதியுடன் இருக்கிறது. இவ்வாறு முதல்வர் பேசினார்.

இதனிடையே மேகேதாட்டுவில் அணை கட்டியே தீருவோம் என்ற கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜா பொம்மையாவின் கருத்துக்கு பதிலளித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை:

கர்நாடக அமைச்சரின் கருத்து நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் மதிக்கமாட்டோம் என்று சொல்வது போல் தெரிகிறது. இத்தகைய போக்கை மத்திய அரசு பார்த்துக் கொண்டிருப்பதும் நல்லதல்ல. எந்த நிலையிலும் அணை கட்டுவதை தடுத்தே தீருவோம் என்று சொல்ல எங்களுக்கும் உரிமையுண்டு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x