புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு ரத்து : முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப் படுவதாக முதல்வர் ரங்கசாமி அறி வித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்துக்கு தனி கல்வி வாரியம் இல்லை. இதனால் புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட மாணவர்கள், தமிழக கல்வி வாரியத்தையும், மாஹே மாண வர்கள் கேரள கல்வி வாரியத்தையும், ஏனாம் மாணவர்கள் ஆந்திர கல்வி வாரியத்தையும் பின்பற்றி கல்வி பயின்று வருகின்றனர்.
கரோனா பரவல் காரணமாக, இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் மாநில பாடத் திட்டத்தின்கீழ் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்தன.
அதன்படி, தமிழகத்திலும் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ‘மாணவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு பலகட்ட ஆலோசனைக்குப் பிறகு தேர்வை ரத்து செய்ய முடிவெடுக் கப்பட்டது’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று வெளியிட்ட அறிக் கையில், ‘புதுச்சேரி, காரைக்காலில் 14,674 மாணவ, மாணவிகள் தமிழ்நாடு பாடத் திட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். கரோனா தொற்று பரவலால் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மாணவர்கள் நலன்கருதி இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு நடத்தப்படாது’ என தெரிவித்துள்ளார்.
