Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக - மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு : ஆளுநரை இன்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்

திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, ஆளுநரை ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். முதல் வராக நாளை மறுநாள் பதவியேற்கிறார்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 125 தொகுதிகளில் வென்றுள்ள திமுக, 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. ஆட்சி அமைப்பதற்கான பணிகளை திமுக தொடங்கியுள்ளது. அதன் முதல்கட்டமாக பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று மாலை 6.40 மணி அளவில் நடந்தது. இதில் திமுகவின் 125 எம்எல்ஏக்கள் மட்டுமல்லாது, திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுக (4), மனிதநேய மக்கள் கட்சி (2), கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி (1), தமிழக வாழ்வுரிமைக் கட்சி (1) ஆகிய கட்சிகளின் 8 எம்எல்ஏக்களும் பங்கேற்றனர்.

திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலினை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்மொழிந்தார். முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வழிமொழிந்தார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். சுமார் 30 நிமிடங்கள் கூட்டம் நடந்தது. அதன்பின்னர், அண்ணா நகரில் உள்ள திமுக மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி வீட்டுக்கு சென்ற ஸ்டாலின், அவரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை ஸ்டாலின் இன்று சந்திக்கிறார். 133 எம்எல்ஏக்களின் கடிதத்தை அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். வரும் 7-ம் தேதி காலை 10 மணி அளவில் கிண்டி ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடக்க இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பதவியேற்பு விழா மிக எளிமையாக நடக்கும் என்று ஏற்கெனவே ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதனால், ஆளுநர் மாளிகையில் உள்ள திறந்தவெளி அரங்கில் பந்தல் அமைக்கப்பட்டு பதவியேற்பு விழா நடக்கும் என்றும், குறைந்த நபர்களை மட்டுமே விழாவுக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் திமுகவினர் தெரிவிக்கின்றனர்.

ஒரு பக்கம் கரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வரும் ஸ்டாலின், அமைச்சர்களை தேர்வு செய்யும் பணியிலும் தீவிரம் காட்டி வருகிறார். பேரவைத் தலைவர் பதவிக்கு துரைமுருகன், ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி உள்ளிட்டோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

பி.கே.சேகர்பாபு, அ.வெற்றிஅழகன், நா.எழிலன், மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், துரைமுருகன், எ.வ.வேலு, கு.பிச்சாண்டி, க.பொன்முடி, சு.முத்துசாமி, என்.கயல்விழி, மு.பெ.சாமிநாதன், க.ராமச்சந்திரன், அர.சக்கரபாணி, ஐ,பெரியசாமி, வி.செந்தில் பாலாஜி, கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.ஆர்.பெரியகருப்பன், எஸ்.ரகுபதி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், சாத் தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, காதர்பாட்சா முத்துராமலிங்கம், கீதா ஜீவன், அப்துல் வகாப், மனோ தங்கராஜ், ஆ.தமிழரசி, வரலட்சுமி ஆகியோரில் பெரும்பாலானோர் அமைச்சராக வாய்ப்புள்ளதாக திமுகவினர் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், டிஜிபி ஜே.கே.திரிபாதி, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் உள்ளிட்டோர் நேற்று மாலை ஆளுநர் மாளிகைக்கு சென்றனர். அங்கு ஆளுநரின் செயலர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீலுடன், பதவியேற்பு நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். பதவியேற்பு நிகழ்ச்சியை அரங்கில் நடத்துவதா அல்லது வெளியில் உள்ள புல்வெளிப் பகுதியில் நடத்துவதா என்பது குறித் தும், விழாவில் எத்தனை பேருக்கு அனுமதி அளிப்பது, அமைச்சர்களுடன் வருவோ ருக்கு குறிப்பிட்ட அளவிலேயே அனு மதிச் சீட்டு வழங்குவது உள்ளிட்ட பல் வேறு விஷயங்கள் குறித்து ஆலோ சிக்கப்பட்டதாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x