Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM

சமையல் காஸ் விலை மேலும் ரூ.25 உயர்வு 2 மாதங்களில் ரூ.125 அதிகரிப்பு

சமையல் காஸ் சிலிண்டர் விலை நேற்று ரூ.25 அதி கரித்து ரூ.835 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் சிலிண்டர் விலை ரூ.125 அதிகரித்து உள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் காஸ் சிலிண்டருக்கான விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் 1 மற்றும் 16-ம் தேதிகளில் நிர்ணயம் செய்கின்றன.

கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக, சமையல் காஸ் சிலிண்டர், பெரிய அளவில் விலை மாற்றம் இன்றி விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஜனவரி மாதத்தில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டரின் விலை ரூ.710 ஆக இருந்தது. பிப்ரவரி மாதம் 4-ம் தேதி சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்பட் டது. பின்னர், அதே மாதம் 16-ம் தேதி ரூ.50, 25-ம் தேதி மேலும் ரூ.25 என உயர்ந்தது. அதாவது, கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் சிலிண்டர் விலை ரூ.100 அதிகரித்து, ரூ.810 ஆக இருந்தது.

இந்நிலையில், மார்ச் மாதத்தின் முதல் நாளான நேற்று சிலிண்டர் விலை மேலும் ரூ.25 உயர்த்தப்பட்டு உள்ளது. இதையடுத்து, சமையல் காஸ் சிலிண்டரின் விலை ரூ.835 ஆக அதிகரித்து உள்ளது.

இதேபோல், சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக் கான சிலிண்டர் விலையும் ரூ.96 அதிகரித்து உள்ளது. அதன்படி ரூ.1,634.50-ல் இருந்து ரூ.1,730.50 ஆக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை மட்டுமின்றி சமையல் காஸ் விலையையும் நிர்ணயித்து வருவதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிலிண்டர்களுக்கான மானியத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் வெகுவாகக் குறைத்து விட்டன. தற் போது, ஒரு சிலிண்டருக்கு ரூ.20 முதல் அதிகபட்சமாக ரூ.30 வரைதான் மானியமாகக் கிடைக்கிறது.

கடந்த ஆண்டில் கரோனா தொற்று காரணமாக பலர் வேலைவாய்ப்புகளை இழந்தனர். மேலும், சிலர் ஊதியக் குறைப்பு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டனர். இதுபோன்று, பல்வேறு காரணங்களால் போதிய வருவாய் இன்றி குடும்பம் நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஏற்கெனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், தற்போது சமையல் காஸ் சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x