Published : 01 Mar 2021 03:16 AM
Last Updated : 01 Mar 2021 03:16 AM

நடத்தை விதிமுறைகள் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை

சென்னை

தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ள தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கும் என தேர்தல் ஆணையம் கடந்த26-ம் தேதி அறிவித்தது. அன்றே தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. தமிழகத்துக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணிக்காககிருஷ்ணகிரி, மதுரை, சேலம்உள்ளிட்ட இடங்களுக்கு துணை ராணுவப் படைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதால், எம்எல்ஏ அலுவலகங்கள் சீல் வைத்து மூடப்பட்டுள்ளன. பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் பேனர்கள், சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் அரசியல் கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று பகல் 12.30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.

மாவட்ட தேர்தல் அதிகாரிகளான ஆட்சியர்கள் உத்தரவின் பேரில் மாவட்டம்தோறும் வாகன கண்காணிப்பு, பணம் எடுத்துச் செல்வோரை கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அனைத்து கட்சிகளும் கூட்டணி,தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அரசு நிர்வாகமும்தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 35 நாட்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x