Published : 01 Mar 2021 03:16 AM
Last Updated : 01 Mar 2021 03:16 AM

செயற்கைக் கோளில் பிரதமர் மோடி படம், பகவத் கீதை வாசகங்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி-சி51 19 செயற்கைக் கோள்கள் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்

ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து நேற்று தீப்பிழம்பை கக்கியபடி, 19 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி - சி51 ராக்கெட்.படம்: ‘இஸ்ரோ’

சென்னை

பிரேசிலின் அமேசானியா-1 உட்பட 19 கல்விசார் மற்றும் வர்த்தக செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அனைத்து செயற்கைக் கோள்களும் அவற்றின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.

‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ அமைப்பு அனுப்பியுள்ள செயற்கைக் கோளில் பிரதமர் மோடியின் படமும், விஞ்ஞானிகள் உள்ளிட்ட 25 ஆயிரம் இந்தியர்கள் பெயர்களும், பகவத் கீதை வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.

விண்வெளி ஆய்வில் தனியார் துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வர்த்தக ரீதியாக அனுப்புவதற்காக 2019-ம் ஆண்டு என்எஸ்ஐஎல் (New Space India Limited) என்ற அமைப்பும், உள்நாட்டில் வடிவமைக்கப்படும் செயற்கைக் கோள்களை அனுப்ப 2020-ல் இன்ஸ்பேஸ் என்ற அமைப்பும் நிறுவப்பட்டன. அதன்பலனாக தற்போது ராக்கெட், செயற்கைக்கோள் தயாரிப்பில் அதிக அளவிலான தனியார் மற்றும் கல்வி சார்நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதில் முதல் முயற்சியாக பிரேசிலின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வடிவமைத்த அமேசானியா-1 உட்பட 19 செயற்கைக் கோள்களை வர்த்தக ரீதியாக விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவுவதற்கான 25 மணி 30 நிமிட கவுன்ட்டவுன் நேற்று முன்தினம் தொடங்கியது.

திட்டமிட்டபடி, பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட் நேற்று காலை 10.24 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் தரையில் இருந்து புறப்பட்ட 17 நிமிடம் 24 விநாடியில் முதன்மை செயற்கைக் கோளை திட்டமிட்ட சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. அதன்பின் ராக்கெட்டின் இறுதிநிலையான பிஎஸ் 4 இயந்திரத்தை தலா இருமுறை நிறுத்தி,இயக்கி, சிறிது சிறிதாக அதன் சுற்றுப்பாதையின் தூரம் அதிகரிக்கப்பட்டது. சுமார் 1 மணி 38 நிமிடமிதவேக பயணத்துக்குப் பிறகுமற்ற 18 நானோ செயற்கைக்கோள்கள் ஒன்றன்பின் ஒன்றாக அவற்றின் சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டன. ராக்கெட்வெற்றிகரமாக செலுத்தப்பட்டதையடுத்து, இஸ்ரோ மையத்தில் இருந்த விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

முதன்மை செயற்கைக்கோளான அமேசானியா-1 மொத்தம் 637 கிலோ எடை கொண்டது. அதன் ஆயுட்காலம் 4 ஆண்டுகள். பிரேசிலில் முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட முதல் செயற்கைக் கோள் இதுவாகும். புவி ஆய்வு மற்றும் பேரிடர் மேலாண்மை, விவசாயம், அமேசான் காடுகள் கண்காணிப்புக்கு இந்த செயற்கைக் கோள் உதவும்.

அமெரிக்காவுக்கு சொந்தமான 13 நானோ செயற்கைக் கோள்களும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) ‘சிந்து நேத்ரா’ செயற்கைக் கோளும் என்எஸ்ஐஎல் நிறுவனம் மூலம் வர்த்தகரீதியில் ஏவப்பட்டன. இவை அனைத்தும் எதிர்கால தேவைக்கான தொழில்நுட்ப வழிகாட்டுதல் ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படும்.

இதுதவிர, சென்னை ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி, நாக்பூர் ஜிஎச் ரைசோனி பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர்  சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பில் உருவான ‘யுனிட்டி சாட்’ என்ற 3 கல்வி சார் செயற்கைக் கோள்களும் ஸ்பேஸ் கிட்ஸ்இந்தியா அமைப்பின் ‘சதீஷ் தவான்சாட்’ செயற்கைக் கோளும் இன்ஸ்பேஸ் அமைப்பு மூலம் செலுத்தப்பட்டன. இவை விண்வெளியில் நிலவும் வானிலை, கதிர்வீச்சு குறித்த ஆய்வு மற்றும் ரேடியோ அலைக்கற்றைகள் தொடர்பு சேவைக்கு பயன்படும். இந்த ராக்கெட்டின் வெற்றி, இந்தியாவுக்கு மட்டுமல்ல, பிரேசில் நாட்டுக்கும் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘வணிகரீதியான முதல் பிஎஸ்எல்வி-சி51 திட்டத்தின் வெற்றிக்கு என்எஸ்ஐஎல் மற்றும் இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். இதுநம்நாட்டின் விண்வெளி சீர்திருத்தங்களில் புது சகாப்தத்தை ஏற்படுத்துகிறது. மேலும், 4 சிறியவை உட்பட 18 துணை செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவை நமது இளைஞர்களின் ஆற்றல் மற்றும் கண்டுபிடித்தல் திறனை வெளிகாட்டுகிறது’ என குறிப்பிட்டுள்ளார்.

‘அமேசானியா-1’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்காக பிரேசில் அதிபருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக பிரதமர் வெளியிட்ட மற்றொரு ட்விட்டர் பதிவில், ‘அமேசானியா-1 செயற்கைக் கோள், பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட்மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு பிரேசில் அதிபர் ஜெய்ர்போல்சனாரோவுக்கு வாழ்த்துகள்.நமது விண்வெளி ஒத்துழைப்பில்இது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். பிரேசில் விஞ்ஞானிகளுக்கு எனது பாராட்டுகள்’ என்றார்.

பிஎஸ்எல்வி 50-வது வெற்றி

 விண்ணில் ஏவப்பட்டுள்ள சதீஷ் தவான் சாட் நானோ செயற்கைக்கோளில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளது. அதனுடன் இஸ்ரோ தலைவர் கே.சிவன், விண்வெளித் துறை செயலர் ஆர்.உமாமகேஸ்வரன் உட்பட 25 ஆயிரம் இந்தியர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், டிஜிட்டல் வடிவிலான பகவத் கீதை வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

 பிஎஸ்எல்வி வகை ராக்கெட்டின் 50-வது வெற்றி இதுவாகும். இதுவரை ஏவப்பட்ட 53 பிஎஸ்எல்வி ராக்கெட்களில் 2 தோல்வியும், ஒன்று பகுதி தோல்வியும் அடைந்துள்ளன.

 பிஎஸ்எல்வி-சி51, என்எஸ்ஐஎல் நிறுவனத்தின் மூலம் வணிகரீதியாக செலுத்தப்படும் முதல் ராக்கெட். எனினும், இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம் மூலம் சிங்கப்பூருக்கு சொந்தமான டெலியோஸ் உட்பட 6 செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி சி-29 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x