Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM
காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை தொடங்கி வைத்ததில் வாழ்நாள் பிறவிப் பயனை அடைந்ததாக மகிழ்கிறேன் என தமிழக முதல்வர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே குன்னத்தூரில் ரூ.14,400 கோடி மதிப்பிலான காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு இணைப்புத் திட்ட அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூ.3,384 கோடி மதிப்பில் காவிரி உபவடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளை புனரமைக்கும் பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திட்டத்துக்கான பூமிபூஜையில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். பின்னர், கால்வாய் வெட்டும் பணியைத் தொடங்கி வைத்தனர். இவ்விரு திட்டங்களுக்கான கல்வெட்டுகளை திறந்து வைத்து முதல்வர் பழனிசாமி பேசியது:
காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை -குண்டாறு இணைப்பு திட்டத்தை தொடங்கிவைத்த இந்த நாளை, என் வாழ்வின் பொன் நாளாக கருதுகிறேன். எனது வாழ்நாள் பிறவிப் பயனை அடைந்துவிட்டதாக மகிழ்ச்சி அடைகிறேன். பலர் இத்திட்டம் நிறைவேறுமா என சந்தேகத்துடன் இருந்தார்கள். கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் விவசாயிகள். நம் மாநிலம் தண்ணீர் பற்றாக்குறையுள்ள மாநிலம். கர்நாடக அணைகள் நிரம்பிய பிறகுதான் மேட்டூர் அணை நிரம்பும்.
அதற்காகத்தான் ஒரு சொட்டு நீர் கூட வீணாகாத அளவுக்கு நீர் மேலாண்மைத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களை மத்திய அரசேபாராட்டும் அளவுக்கு செயல்படுத்தி வருகிறோம். ரூ.1,417 கோடியில் குடிமராமத்துத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் ஊரக வளர்ச்சித் துறை மூலம் சிறு குளங்கள் தூர் வாரப்படுகின்றன. மேட்டூர் அணை கட்டப்பட்ட பிறகு முதல்முறையாக அதிமுக அரசுதான் தூர்வாரியது. தமிழக அரசின் ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டம் குடியரசுத் தலைவரின் உரையிலேயே இடம்பெற்றிருக்கிறது.
மத்திய அரசிடம் இருந்து என்ன பெற்றிருக்கிறீர்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டே இருக்கிறார். இவையெல்லாம்தான் நேரடிசாட்சி. யாராலும் மறைக்க முடியாது. நகர்ப்புறங்களில் உருவாகும் கழிவுநீரை நேரடியாக காவிரியில் கலப்பதைத் தடுத்து, சுத்திகரித்து வெளிவிடும் திட்டம்தான் ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டம்.
இதேபோல, காவிரி- கோதாவரி திட்டத்தையும் நிறைவேற்றுவோம். பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. நீர் மேலாண்மை திட்டத்தில் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது. இப்படியாக மக்களின் எண்ணங்களைப் புரிந்துகொண்டு நிறைவேற்றும் அரசாக அதிமுக அரசு செயல்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்காக அரசு மருத்துவக் கல்லூரி, வேளாண் கல்லூரி கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், பல் மருத்துவக் கல்லூரியும் தொடங்கப்பட உள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு திமுகஅரசுதான் புரிந்துணர்வு ஒப்பந்தம்போட்டது. அந்தத் திட்டத்தைச் செயல்படவிடாமல் தடுக்கும் வகையில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்தது அதிமுக அரசு. 5 ஆண்டுகளில் 2 முறை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இப்போது எங்கள் அரசு மீது பல அவதூறு பிரச்சாரங்களை செல்லும்இடங்களில் எல்லாம் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களாக அவரால்எதையும் கூற முடியவில்லை. இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
விழாவில், முதல்வர், துணை முதல்வருக்கு வெள்ளி வேல் பரிசளிக்கப்பட்டது. முன்னதாக, சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஓட்டிய டிராக்டரில் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் புறவழிச் சாலையில் இருந்து விழா நடைபெறும் இடத்துக்கு வந்தனர்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஓ.எஸ்.மணியன், வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி, க.பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி, புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொ) ஜெ.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT