Published : 12 Jan 2021 03:13 AM
Last Updated : 12 Jan 2021 03:13 AM

விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை வேளாண் சட்டங்களை ஆய்வு செய்ய சிறப்புக் குழு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைமுதியவர்கள், பெண்கள் வீடு திரும்ப தலைமை நீதிபதி வேண்டுகோள்

விவிவசாயிகள் போராட்டத்தை முடிவுக் குக் கொண்டுவருவதற்காக, புதிய வேளாண் சட்டங்களை ஆய்வு செய்ய சிறப்புக் குழுவை நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

கடும் குளிர், கரோனா வைரஸை கருத் தில் கொண்டு முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் போராட்டத்தில் இருந்து விலகி வீடு திரும்ப வேண்டும் என்று தலைமை நீதிபதி வேண்டுகோள் விடுத்தார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், டெல்லியின் எல்லைப் பகுதிகளை முற் றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதர வாகவும் எதிராகவும் உச்ச நீதிமன்றத் தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய் யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபண்ணா, ராமசுப்பிரமணியன் ஆகி யோரைக் கொண்ட அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறும்போது, "விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு கையாளும் விதம் அதிருப்தி அளிக்கிறது. விவசாயி களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவ தாக கடந்த விசாரணையின்போது அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கடந்த கால அரசால்தான் பிரச்சினை எழுந்தது என்று கூறுவதை ஏற்க முடியாது. கடந்த விசாரணையின்போதே வேளாண் சட்டங்களை அமல் செய்வதை நிறுத்திவைக்க பரிந்துரை செய்தோம். ஆனால், அரசு தரப்பில் தொடர்ந்து அவகாசம் கோரப்படுவது ஏன்’’ என்று கேள்வி எழுப்பினார்.

அதைத் தொடர்ந்து நடந்த வாதம் வருமாறு:

மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா: பெரும்பாலான விவசாய சங்கங்கள் வேளாண் சட்டங்களை ஆத ரிக்கின்றன. சில சங்கங்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கின்றன. விரைவில் விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

தலைமை நீதிபதி: வேளாண் சட்டங் களை ஆதரித்து உச்ச நீதிமன்றத்தில் ஒருவர்கூட மனு தாக்கல் செய்யவில் லையே? புதிய வேளாண் சட்டங்களை நிறுத்திவைக்க வேண்டும். இல்லை யெனில் உச்ச நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்க நேரிடும். கடும் குளிரில் விவசாயிகள் அவதியுற்று வருகின்றனர். சிலர் தற்கொலையும் செய்துள்ளனர். நிலைமை மோசமாகிக் கொண்டே இருக் கிறது. வேளாண் சட்டங்களை ஆராய்ந்து விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண சிறப்புக் குழுவை நியமிக்க வேண்டும்.

அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணு கோபால்: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு நீதிமன்றத் தால் தடை விதிக்க முடியாது.

தலைமை நீதிபதி: போதிய கலந்தா லோசனை நடத்தாமல் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்காரண மாகவே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த பிரச்சினைக்கு மத்திய அரசுதான் தீர்வு காண வேண்டும்.

அட்டர்னி ஜெனரல் வேணுகோபால்: சில மாநில அரசுகள் மட்டுமே புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக் கின்றன. பெரும்பான்மையான மாநில அரசுகள் சட்டங்களை ஆதரிக்கின்றன. குடியரசு தினத்தில் டெல்லியில் டிராக்டர் பேரணியை நடத்த விவசாயிகள் திட்ட மிட்டுள்ளனர். இதுபோன்ற வன்முறை, சட்டவிரோத செயல்களை தடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே (விவசாயிகள் தரப்பு): ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி நடத்தும் திட்டமில்லை. ஒவ்வொரு விவசாயியின் குடும்பத்திலும் ஒரு நபர் ராணுவத்தில் பணியாற்றுகிறார். குடியரசு தினத்தை விவசாயிகள் மதிக்கின்றனர். குடியரசு தின விழாவுக்கு இடையூறு செய்வோம் என்று விவசாயிகள் ஒரு போதும் கூறவில்லை.

தலைமை நீதிபதி: விவசாயிகளின் முடிவை வரவேற்கிறோம். டிராக்டர் பேரணி உள்ளிட்ட சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் தொடர்பாக போலீஸார் முடிவு செய்வார்கள்.

மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே (ஹரியாணா அரசு தரப்பு): விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் வெளி நாட்டு சக்திகள் உள்ளன. கனடாவை சேர்ந்த சில அமைப்புகள், சீக்கியர் களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோஷத்துடன் நிதி வசூல் நடத்தி வருகின்றன.

வழக்கறிஞர் புல்கா (விவசாயிகள் தரப்பு): முதியவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருகின்றனர். அவர்களை நக்சல்கள் என்றும் காலிஸ்தான் தீவிர வாதிகள் என்றும் அரசு தரப்பு கூறுகிறது. வெளிநாட்டு சதி இருப்பதாக குற்றம் சாட்டுகிறது. டெல்லியில் போராடும் முதி யவர்களின் மகன்கள் ராணுவத்தில் பணி யாற்றுகின்றனர். அவர்கள் தேச விரோதிகளா?

தலைமை நீதிபதி: உங்கள் உணர்வு களை புரிந்து கொள்கிறேன். டெல்லியில் நிலவும் கடும் குளிர், கரோனா வைரஸ் அச்சுறுத்தலை கருத்தில்கொண்டு மூத்த குடிமக்கள், பெண்கள், குழந்தைகள் போராட்ட களத்தில் இருந்து விலகி வீடு திரும்ப வேண்டும்.

அட்டர்னி ஜெனரல் வேணுகோபால்: கடந்த ஆண்டு ஜூன் மாதமே அவசர சட்டம் வாயிலாக வேளாண் சட்டங்கள் அமலுக்கு வந்துவிட்டன. இந்த சட்டத்தின்படி சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவ சாயிகள், வியாபாரிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். வேளாண் சட்டங்களை நிறுத்திவைத்தால் விவசாயிகளுக்கு மிகப் பெரிய இழப்பு நேரிடும். நேரடியாகவோ, மறைமுகமாகவோ புதிய வேளாண் சட்டங்களை நிறுத்திவைக்க உத்தரவிடக் கூடாது. நிபுணர் குழு அமைத்தாலும் பலன் இல்லை.

தலைமை நீதிபதி: முன்னாள் நீதிபதி கள், விவசாய பிரதிநிதிகள், மத்திய அரசு பிரதிநிதிகள் அடங்கிய சிறப்புக் குழுவை அமைக்கலாம். சிறப்புக் குழுவின் அவசியம் குறித்து விவசாய சங்கங்களிடம் பிரசாந்த் பூஷண், துஷ்யந்த் தவே, புல்கா, கொன்சால்ஸ் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் விளக்கிக் கூற வேண்டும். குழுவில் இடம்பெற வேண்டிய முன்னாள் நீதிபதிகளின் பெயர்களை விவசாய சங்கங்கள் பரிந் துரைக்கலாம்.

துஷ்யந்த் தவே: முன்னாள் நீதிபதி ஆர்.எம்.லோதாவை சிறப்புக் குழுவில் நியமிக்கலாம்.

தலைமை நீதிபதி: தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் ஒரு விவசாயி. சிறப்புக் குழுவில் இடம்பெறுவது தொடர்பாக ஏற்கெனவே அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால், இந்தி மொழி பிரச்சினையால் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்துவது சிரமம் என அவர் கூறிவிட்டார்.

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா: உச்ச நீதிமன்றம் இன்று எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது. குழுவில் இடம்பெற வேண்டியவர்களின் பெயர்களை பரிந்துரைக்க ஒருநாள் அவகாசம் தேவை.

இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி பாப்டே நேற்று எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘அமைதி வழியில் போராட்டம் நடத்தலாம்’

வழக்கு விசாரணையின்போது அனைத்து தரப்புகளுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்தது. அப்போது தலைமை நீதிபதி பாப்டே சில முக்கிய கருத்துகளை முன்வைத்தார்.

நாங்கள் வேளாண், பொருளாதார நிபுணர்கள் கிடையாது. விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசு பிரச்சினைக்கு தீர்வு காண முயல்கிறதா அல்லது பிரச்சினைக்கு காரணமாக இருக்கிறதா? வேளாண் சட்டங்களை நிறுத்திவைக்க முடியுமா, முடியாதா? இதில் கவுரவ பிரச்சினை இருக்கிறதா?

போராட்டத்தில் ஏதாவது விபரீதம் நேரிட்டால் அனைத்து தரப்பினரும் பொறுப்பேற்க வேண்டும். விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு கையாளுவது திருப்திகரமாக இல்லை. சட்டங்களை நிறைவேற்றும் முன்பாக போதிய கலந்தாலோசனைகளை நடத்தவில்லை. இந்த சட்டம் நல்லதா, கெட்டதா என்பதை நிபுணர் குழுவே முடிவு செய்ய வேண்டும். எங்களை பொறுத்தவரை பிரச்சினைக்கு சுமுக தீர்வு எட்டப்பட வேண்டும். உரிமைக்காக போராட அனைவருக்கும் உரிமை உள்ளது. மகாத்மா காந்தியடிகள் சத்தியாகிரக போராட்டத்தை நடத்தினார். அவரைப் பின்பற்றி அமைதி வழியில் போராட்டம் நடத்த வேண்டும். முந்தைய அரசுகளை குறைகூறுவதை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தலைமை நீதிபதி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x