Published : 21 Nov 2020 03:15 am

Updated : 21 Nov 2020 03:15 am

 

Published : 21 Nov 2020 03:15 AM
Last Updated : 21 Nov 2020 03:15 AM

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்பதால் வரும் 24-ம் தேதி கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட 8 கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் சே.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:


தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் அதே பகுதியில் வரும் 23-ம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி மேற்கு, வடமேற்கு திசையில் நகரக்கூடும்.

இதன் காரணமாக வரும் 23-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 6 கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 24-ம் தேதி மேற்கூறிய 6 மாவட்டங்கள் மற்றும் கடலூர், மயிலாடுதுறை ஆகிய 8 கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

21, 22-ம் தேதிகளில் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் லேசான மழையும், இதர மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும்.

23-ம் தேதி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி, 24-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதி, 25-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

20-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் வைப்பாறில் 10 செ.மீ., எட்டயபுரம், சிவகங்கை மாவட்டம் திருபுவனம், விருதுநகர் மாவட்டம் சிவகாசி, மதுரையில் 4 செ.மீ., தூத்துக்குடி மாவட்டம் சூரன்குடி, ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம், மதுரை மாவட்டம் புளிப்பாடியில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x