Published : 12 Nov 2020 03:14 AM
Last Updated : 12 Nov 2020 03:14 AM

தூத்துக்குடியில் ஆய்வு கூட்டத்துக்கு வந்தபோது மனு அளித்த மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு ஒரு மணி நேரத்தில் பணி ஆணை முதல்வர் பழனிசாமியின் உடனடி நடவடிக்கையால் நெகிழ்ச்சி

தூத்துக்குடியில் ஆய்வுப் பணிக்கு வந்தபோது வேலை கேட்டு தன் னிடம் மனு அளித்த மாற்றுத்திற னாளி பெண்ணுக்கு அடுத்த 1 மணி நேரத்தில் பணி நியமன ஆணையை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் அரசின் வளர்ச்சி திட்டப் பணி கள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்வர், நேற்று முன்தினம் நாகர்கோவில் வந்தார். பின்னர், நேற்று தூத்துக்குடி வந்த அவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனை நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, ஆட்சியர் அலுவலகத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

தென்பாகம் காவல்நிலையம் அருகே வந்தபோது மாற்றுத்திற னாளி பெண் ஒருவர் கையில் மனு வுடன் நிற்பதைக் கண்டு காரை நிறுத்தி அந்தப் பெண்ணை அழைத்து விசாரித்தார். சுந்தர் நகரைச் சேர்ந்த சின்னத்துரை என்பவரின் மனைவி மாரீஸ்வரி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், முதல்வரிடம் மனு ஒன்றை அளித்தார்.

அதில், ‘நான் 2 கால்களும் நடக்க இயலாதவர். எனது கணவர் கூலி வேலை செய்கிறார். 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. எனது கண வரின் வருமானம் குடும்பத்தைக் காப்பாற்ற போதுமானதாக இல்லை. நான் எம்.ஏ., வரை படித் துள்ளேன். எனது குடும்பத்தை காப் பாற்ற ஏதாவது வேலை வழங்க வேண்டும்’ எனத் தெரிவித் திருந்தார்.

மனுவை படித்த முதல்வர், அந் தப் பெண்ணுக்கு உரிய வேலை வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், மாரீஸ்வரிக்கு சுகாதாரத் துறை மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வார்டு மேலாளர் பணி வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

பின்னர் ஆட்சியர் அலுவலகத் தில் காலை 10 மணிக்கு நடந்த ஆய்வுக் கூட்டத்தில் வைத்து, மாரீஸ்வரிக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். அவருக்கு மாதம் ரூ.15 ஆயிரம் ஊதியம் கிடைக்கும். மாரீஸ்வரி கூறும்போது, ‘‘எனது மனுவைப் பெற்று ஒரு மணி நேரத்தில் பணி நியமன ஆணை வழங்கி, எனது குடும் பத்தை காப்பாற்றிய முதல்வருக்கு நன்றி’’ என நெகிழ்ந்தார்.

அதைத் தொடர்ந்து கரோனா தடுப்புப் பணிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்தார். இதில், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, சி.விஜயபாஸ்கர், எம்எல்ஏக்கள் எஸ்.பி.சண்முகநாதன், பி.சின்னப் பன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், ‘‘தமிழகத்தில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல் லூரிகள் உருவாக்கியுள்ளதன் மூலம் 1,650 மருத்துவப் படிப்புக் கான இடங்களை ஏற்படுத்தியுள் ளோம். 6 சட்டக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஸ்டாலின் என்ன சாதனை செய்திருக்கிறார். கல்வியில் புரட்சி, மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உள்ளோம்’’ என்றார்.

அதைத் தொடர்ந்து விருதுநக ரில் கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்த முதல்வர், அங்கு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக யாராவது கூற முடியுமா, எதிர்க்கட்சியில் உள்ளவர்களுக்கு விவசாயத்தைப் பற்றியே தெரியாது. யாரோ எழுதிக் கொடுத்ததை வைத்து படிக்கிறார்கள்.

கரோனா பாதிப்பால் துரைக் கண்ணு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால், வேண்டும் என்றே திட்டமிட்டு எதிர்க்கட்சித் தலைவர் அவதூறான தகவலை பரப்பி வருகிறார். அதே காவேரி மருத்துவமனையில்தான் கருணா நிதியும் சிகிச்சை பெற்றார். அப்படி யானால் சிகிச்சை அளித்த மருத் துவர்களை குறைகூறுகிறாரா, மருத்துவர்களை கொச்சைப் படுத்தி பேசுவது கண்டனத்துக்கு உரியது. கேரளாவைவிட தமிழ கத்தில் கரோனா பாதிப்பு குறைந் துள்ளது. எதிர்க்கட்சியினர் இதில் அரசியல் செய்ய வேண்டாம்.

ஸ்டாலின் அடுத்த தேர்தலில் நிற்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அவர் மீதான தேர்தல் வழக்கில் முடிவு வேறுவிதமாக இருந்தால் 6 ஆண்டுகளுக்கு ஸ்டாலின் தேர்த லில் நிற்க முடியாது. நல்ல எண்ணம் இருந்தால் நல்ல தீர்ப்பு கிடைக்கும். தீய எண்ணம் இருந்தால் ஆண் டவன் பார்த்துக் கொள்வார்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

‘தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுக்கு ஸ்டாலின்தான் காரணம்’

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, ‘‘அந்த சம்பவம் (துப்பாக்கிச் சூடு) நடப்பதற்கு 100-க்கு 100 சதவீத காரணம் ஸ்டாலின்தான். அவர் அமைச்சராக இருந்தபோதுதான் ஸ்டெர்லைட் 2-ம் விரிவாக்கத்துக்கு அனுமதி அளித்துள்ளார். ஸ்டாலினே கையெழுத்து போட்டு நிலம் ஒதுக்கியுள்ளார்.

இதுதொடர்பாக, ஸ்டாலின் பேசியது சட்டப்பேரவை அவைக்குறிப்பில் இருக்கிறது. இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

ஸ்டெர்லைட் 2-ம் விரிவாக்கம் இல்லையென்றால் இந்த நிகழ்வே நடந்திருக்காது. எனவே, இந்தப் பிரச்சினை எழுவதற்கு முழு காரணம் ஸ்டாலின்தான். எல்லாவற்றையும் அவர்கள் செய்துவிட்டு, பழியை எங்கள் மீது போடுகிறார்கள்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x