Published : 15 Dec 2021 03:06 AM
Last Updated : 15 Dec 2021 03:06 AM

உரம் தொடர்பான புகார்களுக்கு - உதவி மைய கைபேசி எண்ணில் விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம் : வேளாண் துறை செயலர் தகவல்

உரம் தொடர்பான தகவல்களை பெறவும், புகார் தெரிவிக்கவும், உர உதவி மையத்தின் கைபேசி எண்ணை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம் என்று வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகம் முழுவதும் உள்ள 8,100 தனியார் விற்பனை நிலையங்கள், 4,354 கூட்டுறவு விற்பனைமையங்கள் மூலம் விவசாயிகளுக்கு உரங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

மாதம்தோறும் மாநில அரசுக்கு தேவையான மானிய உரங்களான யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உரங்கள் மத்திய அரசால்ஒதுக்கப்படுகின்றன. இவை 15 உர நிறுவனங்கள் மூலம் தமிழகத்துக்கு வழங்கப்படுகின்றன.

மாவட்ட அளவில் உரம் வழங்குதல், உர நகர்வு, உர கண்காணிப்பு, தரப் பரிசோதனை உள்ளிட்ட பணிகள் மாவட்ட அளவிலான வேளாண்மை உதவி இயக்குநரால் கண்காணிக்கப்படுகின்றன. இதுதவிர, விவசாயிகள் உரம் தொடர்பான கோரிக்கைகள், புகார்களை தெரிவிக்கவும், அதை நிவர்த்தி செய்யவும் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்அலுவலகத்தில் உரக் கண்காணிப்பு மையம் செயல்படுகிறது.

முதல்வரின் உத்தரவுப்படி, மாநில அளவில் விவசாயிகள் உரம்தொடர்பான தகவல்களை பெறவும், புகார்களை தெரிவிக்கவும், சென்னை வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தில் உர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் 93634 40360 என்ற கைபேசி எண்ணை வாய்மொழியாகவோ, வாட்ஸ்அப் மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x