

பெண்களை அவமரியாதை செய்யும் வகையில் 10-ம் வகுப்பு தேர்வில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய கேள்வியை நீக்குவதாகவும் அந்தப் பகுதி வினாக்களுக்கு அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பெண் வழங்கப்படும் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வுநடந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை ஆங்கில தேர்வு நடந்தது. சிறுகுறிப்பில் இருந்து கேட்கப்படும் கேள்விக்கு விடையளிப்பது போன்று இருந்த ஒரு கேள்வியில், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், பாலின பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் ஒரு கேள்விகேட்கப்பட்டிருந்தது. ஆண்களுக்கு பெண்கள் அடங்கி இருக்க வேண்டும் என்ற தொனியில் அக்கேள்வி அமைந்திருந்தது.
பெண்களை அவமரியாதை செய்யும் வகையில் இருந்த அந்தகேள்விக்கு பல்வேறு தரப்பில்இருந்து எதிர்ப்புகள் எழுந்தன.மத்திய அரசின் பிற்போக்குத்தனமான கருத்து, பள்ளி பாடப்புத்தகத்தில் திணிக்கப்பட்டிருப்பதாக பலர்கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின்உ.பி. மாநில பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார். நாடாளுமன்றத்திலும் இதுகுறித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரச்சினை எழுப்பினார்.
இதனிடையே, சிபிஎஸ்இ 10-ம்வகுப்பு ஆங்கில தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி சரியா, தவறா என ஆராய நிபுணர் குழு அமைத்து உத்தரவிடப்பட்டது. அக் குழு அளித்தபரிந்துரைகளை ஏற்று, சர்ச்சைக்குரிய அந்த கேள்வியை நீக்குவதாகவும் அக்கேள்விக்கு விடையளித்த அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண் வழங்கப்படும் என்றும்சிபிஎஸ்இ நேற்று அறிவித்தது. இதுதொடர்பாக சிபிஎஸ்இ தேர்வுகட்டுப்பாட்டு அதிகாரி சன்யாம் பரத்வாஜ் வெளியிட்ட சுற்றறிக்கை:
கடந்த 11-ம் தேதி நடந்த 10-ம்வகுப்பு முதல் பருவத் தேர்வின் ஆங்கில வினாத்தாளில் இடம்பெற்றிருந்த ஒரு பத்தியானது, கேள்விகள் கேட்கப்படுவதற்கான வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டதாக இல்லை. இதுதொடர்பாக நிறையபுகார்கள் வரப்பெற்றன. இதுகுறித்து ஆய்வு செய்ய பாட நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது.
அக்குழு அளித்த பரிந்துரையை ஏற்று சர்ச்சைக்குரிய அந்த பத்தியையும் அதில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளையும் நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சீரான தன்மையையும், சமத்துவத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் அந்த பகுதியில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு அனைத்து மாணவர்களுக்கும் முழுமதிப்பெண் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.