கரோனாவால் உயிரிழந்த மருத்துவப் பணியாளர்களின் - வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி : சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கரோனாவால் உயிரிழந்த மருத்துவப் பணியாளர்களின் -  வாரிசுகளுக்கு  கருணை அடிப்படையில் பணி :  சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Updated on
1 min read

கரோனாவால் உயிரிழந்த மருத்துவப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கேப்பிட்டல் லாண்டு நிறுவனத்தின் சிஎஸ்ஆர் பங்களிப்பான ரூ.2.16 கோடியில், நிமிடத்துக்கு 1,000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டரை அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தார்.

இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) ஜெமிலா, ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இம்மாத இறுதிக்குள் 100 சதவீதம் முதல் தவணை கரோனா தடுப்பூசி போட்டுள்ளதை இலக்காகக் கொண்டு பணியாற்றி வருகிறோம். தமிழகத்தில் இதுவரை 6.71 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 76 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 40 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர்.

கரோனா தொற்றால் உயிரிழந்தமருத்துவப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு, ஏற்கெனவே உள்ளவிதிகளின்படி கருணை அடிப்படையிலான வேலைவாய்ப்பு விரைவாககிடைக்காது. எனவே, கரோனா தடுப்பு பணியின்போது உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றுமுதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு கூடுதலாக 1,500 மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.அதேபோல, 7.5 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் மருத்துவ மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டை விட நடப்பாண்டு கூடுதலாக இருக்கும். தமிழகத்தில் இதுவரை 4,483 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு, 6 பேர் இறந்துள்ளனர். தற்போது 513 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

744 பேருக்கு கரோனா தொற்று

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று 14 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக கோவையில் 6 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,415 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 8,600 பேர் இறந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in