

தமிழகத்தில் கோவை, கடலூர், திருச்சி, டெல்டா மாவட்டங்கள் உட்பட 13 மாவட்டங்களில் இன்றுகனமழை பெய்யும். 24, 25-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது தமிழக கடலோர பகுதி வரை நீடிக்கிறது. இதன் காரணமாக 22-ம் தேதி (இன்று) கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், இதர மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
23-ம் தேதி (நாளை) புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், இதர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
24, 25-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன முதல்மிக கனமழையும், தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், இதர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும்.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
21-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுச்சேரியில் 10 செ.மீ.,திருச்சி மாவட்டம் நந்தியார்தலை, விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டையில் 9 செ.மீ., பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை, வேலூர்மாவட்டம் பொன்னை அணை, காட்பாடி, விழுப்புரம் மாவட்டம் வானூரில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.