Published : 21 Nov 2021 03:06 AM
Last Updated : 21 Nov 2021 03:06 AM

இனி நடக்கவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களிலும் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனியே தலைமை ஏற்க வேண்டும் : சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விருப்பம்

இனி நடக்கவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனியேதலைமை தாங்கி வழிநடத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதற்கான பாராட்டு விழாசென்னையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோப்பையைக் காண்பித்து அணியின் தலைவர்தோனியும், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன துணைத் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான என்.சீனிவாசனும் வாழ்த்துப் பெற்றனர். அதையடுத்து வீரர்களுக்கு பரிசு வழங்கி முதல்வர் கவுரவித்தார். அதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன துணைத் தலைவர் சீனிவாசன், நான் இந்த விழாவில் முதல்வராகத்தான் பங்கேற்க வேண்டும் என்றுவிரும்பினார். அவரைப் பொறுத்தஅளவில் முதல்வராக பங்கேற்றிருந்தாலும், என்னைப் பொறுத்தவரை தோனியின் ரசிகராகத்தான் இந்தபாராட்டு விழாவில் பங்கேற்றுள்ளேன். எனது தந்தை கருணாநிதி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் அவர் ரசிகர்கள்தான். அதனால் மகிழ்ச்சியோடு, பெருமையோடு, பூரிப்போடு வந்துள்ளேன்.

சென்னை என்றாலே சூப்பர்தான். அது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. நானும் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உள்ளவன்தான். சென்னை மேயராக இருந்தபோது காட்சிப் போட்டிகளில் விளையாடியுள்ளேன். போட்டிகளையும் நடத்தியுள்ளேன்.

மேயராக இருந்தபோது சேப்பாக்கம் மைதானத்தில் கார்கில் போர் நிதிக்காக நடைபெற்ற காட்சிப் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி முதல்முறையாக உலகக் கோப்பையை வென்றபோது அதன் தலைவராக இருந்த கபில்தேவுடன் விளையாடும் வாய்ப்பு பெற்றேன். அவருக்குப் பிறகு நமக்கு உலகக் கோப்பையை தோனி பெற்றுத் தந்தார். தோனியின் சொந்த மாநிலம் ஜார்கண்ட். ஆனால் அவர் இப்போது சென்னைக்காரராகவே ஆகிவிட்டார். தமிழக ரசிகர்களின் செல்லப்பிள்ளையாக இருக்கிறார்.

தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை மறக்கவே முடியாது. அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தெண்டுல்கருக்குப் பிறகு இந்தியாவில் கிரிக்கெட் என்றால் அது தோனிதான்எனும் நிலை உருவாகியிருக்கிறது.

ஒரு சிறிய நகரில் இருந்து கடினஉழைப்பால் உச்சத்தைத் தொட்டவர். சாதாரண பின்புலத்தில் இருந்து வந்து அசாதாரண உயரங்களைத் தொட்டவர் என்பதால்தான் கருணாநிதி அவர் மீது தனி அன்பு கொண்டிருந்தார்.

ஆளுமைத் திறன் கொண்டவராக இருப்பதால்தான் அனைவரும் அவரைப் பாராட்டுகின்றனர். எப்போதுமே இலக்குதான் முக்கியம். அதை அடைய உழைப்புதான்மிக மிக முக்கியம். இலக்கும் உழைப்பும் ஒன்றுசேர்ந்தால் அவர்களை யாராலும் வீழ்த்த முடியாது.இது விளையாட்டுக்கு மட்டுமல்ல; அரசியலுக்கும் பொருந்தும்.

இனிவரும் ஐபிஎல் தொடர்களிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனியே தலைமை தாங்கி வழிநடத்த வேண்டும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

இவ்விழாவில் சென்னை சூப்பர்கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனிபேசும்போது, ‘‘கிரிக்கெட் வடிவம்,ஆட்டம் மாறியுள்ளது. இச்சூழலில்தான் 2008-ம் ஆண்டு முதல் எனக்குசென்னையுடன் பிணைப்பு ஏற்பட்டது. எனது முதல் டெஸ்ட் மேட்ச் சென்னையில்தான் நடைபெற்றது. சென்னையில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ்அணிக்கு மட்டுமல்லாமல் சிறப்பாக விளையாடும் அனைத்து கிரிக்கெட் வீரர்களையும் ஊக்குவிப்பார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுஇப்போது மீண்டு வந்துள்ளோம். எனது ஒருநாள் கடைசி போட்டி சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற்றது. அதுபோல எனது டி20கிரிக்கெட் கடைசிப் போட்டி சென்னையில்தான் இருக்கும். அது அடுத்த ஆண்டாக இருக்கலாம். 5 வருடம் கழித்துக்கூட இருக்கலாம். என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி’’ என்றார்.

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரும், மேலாண் இயக்குநருமான என்.சீனிவாசன் பேசியதாவது:

கிரிக்கெட் வீரர் காந்த் டாஸ்போடுவது போல ‘தி இந்து’ நாளிதழில் புகைப்படம் வெளியானது. அந்த நேரத்தில்தான் எங்கள் அணிக்கு பெயரை தேர்ந்தெடுக்க முடிவு செய்தோம். ஒரு எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புமாறு கிரிக்கெட் ரசிகர்களைக் கேட்டுக் கொண்டோம். அதை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய முடிவு செய்தோம்.

‘கோரமண்டல் கிங்’ உட்பட பல்வேறு பெயர்களை ரசிகர்கள் பரிந்துரைத்தனர். அதில் பெரும்பாலானவர்கள் ‘சென்னை சூப்பர்கிங்ஸ்’ என்று பெயர் சூட்ட விருப்பம் தெரிவித்ததால், அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ என பெயரிட்டோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கபில்தேவ், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் முழுநேர இயக்குநர் ரூபா குருநாத், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) செயலர் ஜெய் ஷா, ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல், தமிழக அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டஅமைச்சர்கள், எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள், கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x