Published : 14 Nov 2021 03:06 AM
Last Updated : 14 Nov 2021 03:06 AM

தஞ்சையில் ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழா : பல்வேறு கட்சி, அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை

தஞ்சாவூரில் ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழா நேற்று சிறப்பாக கொண்டப்பட்டது. இதையொட்டி, பல்வேறு கட்சி, அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ராஜராஜ சோழனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திரமான நேற்று, அவரின் 1036-வது சதய விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நேற்று காலை தேவாரம் நுாலுக்கு ஓதுவார்கள் சிறப்பு பூஜைகள் செய்து, கோயிலின் உள் பிரகாரத்தில் ஊர்வலமாக கொண்டு வந்து, நந்தி மண்டபத்தில் பாராயணம் செய்தனர்.

மாவட்ட ஆட்சியர் மரியாதை

இதைத் தொடர்ந்து கோயிலின் வெளியே உள்ள ராஜராஜ சோழன்சிலைக்கு, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சதயவிழாக் குழு தலைவர் து.செல்வம், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, தருமபுர ஆதீனம் கட்டளை சொக்கலிங்க தம்பிரான் மற்றும் பல்வேறுஅரசியல் கட்சியினர், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பேரபிஷேகம், மகா ஆராதனை

தொடர்ந்து, குஜராத்தில் இருந்து மீட்டு கொண்டுவரப்பட்ட ராஜராஜ சோழன், உலோகமாதேவி சிலைகள் முன்பாக புனிதநீர் அடங்கிய குடங்கள் வைத்துசிவாச்சாரியர்கள் சிறப்பு யாகம்நடத்தினர். பின்னர் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட 38 மங்கள பொருட்களால் பேரபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

நேற்றிரவு ராஜராஜ சோழன் மற்றும் உலோக மாதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோயில் உள் பிரகாரத்தில் புறப்பாடு நடைபெற்றது. இதையொட்டி கோயில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

சதய விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும், அரசு சார்பில் பட்டிமன்றம், கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள், விருது வழங்கல் என2 நாட்கள் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக, நேற்று ஒருநாள் மட்டும் நடைபெற்றது.

உடையாளூரில் சிறப்பு அபிஷேகம்

ராஜராஜ சோழனின் சமாதி இருப்பதாகக் கூறப்படும் கும்பகோணம் அருகே உடையாளுரில் உள்ள சிவலிங்கத்துக்கு சிறப்பு ஹோமம், அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

இதில், கும்பகோணம் எம்எல்ஏசாக்கோட்டை க.அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ பாப்பாசுப்பிரமணியன், இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன்சம்பத், தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளர் கவுதமன், நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்டபலர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x