Published : 14 Oct 2021 05:54 AM
Last Updated : 14 Oct 2021 05:54 AM

திருவேற்காடு, சமயபுரம், இருக்கன்குடி - கோயில் நகைகளை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றும் திட்டம் : பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்

திருவேற்காடு, சமயபுரம், இருக்கன்குடி மாரியம்மன் கோயில்களில் பயன்பாடற்ற பலமாற்று தங்க நகைகளை 24 காரட் தங்க கட்டிகளாக மாற்றுவதற்கான பூர்வாங்க பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்து சமய அறநிலையத் துறையின் 2021-22-ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையில், கடந்த 10 ஆண்டுகளாக கோயில்களில் காணிக்கையாக வந்த பலமாற்று பொன் நகைகளில், கோயிலுக்கு தேவைப்படுபவை தவிர, மற்றவற்றை மும்பையில் உள்ள மத்தியஅரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத் தங்கமாக மாற்றி கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்யப்படும். அதில் இருந்துவரும் வட்டி மூலம் கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகளை கண்காணிக்க 3 மண்டலங்கள் ஏற்படுத்தப்படும். ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையிலான குழுக்கள் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், திருவேற்காடு-கருமாரியம்மன் கோயில், சமயபுரம்- மாரியம்மன் கோயில், இருக்கன்குடி- மாரியம்மன் கோயில்களில் உள்ள பயன்பாடற்ற பலமாற்று தங்க நகைகளை 24 காரட்தங்க கட்டிகளாக மாற்றுவதற்கான பூர்வாங்கப் பணிகளை காணொலிவாயிலாக முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அறநிலையத் துறை செயலர் பி.சந்திரமோகன், அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் ஆர்.கண்ணன், திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருச்சி ஆட்சியர் சு.சிவராசு, விருதுநகர் ஆட்சியர் ஜெ,மேகநாத ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x