Published : 21 Aug 2021 07:00 AM
Last Updated : 21 Aug 2021 07:00 AM

பணி வரன்முறையை வைத்து - மகப்பேறு விடுப்பில் பாரபட்சம் கூடாது : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மகப்பேறு விடுப்பு வழங்கும்போது பணி வரன்முறை செய்யப்பட்டவர்கள், வரன்முறை செய்யப்படாதவர்கள் என பெண் ஊழியர்கள் மத்தியில் எவ்வித பாகுபாடோ அல்லது பாரபட்சமோ காட்டக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை 180 நாட்களில் இருந்து270 நாட்களாக அதிகரித்து தமிழகஅரசு கடந்த 2016-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது.

அரசாணை அமலாகவில்லை

இந்தச் சலுகையை பணி வரன்முறைப்படுத்தப்படாத தற்காலிக பணியாளர்களுக்கும் நீட்டித்து தமிழக அரசு கடந்த 2020-ம்ஆண்டு உத்தரவிட்டது. ஆனால்,இந்த அரசாணைகள் இன்னும் அமல்படுத்தப்படவில்லை எனக் கூறி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜகுரு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், ‘‘அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும், பணி வரன்முறைப்படுத்தப்படாத, தற்காலிக பெண் பணியாளர்கள், மகப்பேறு விடுப்பு வழங்கக் கோரி விண்ணப்பித்தும், அவை இன்னும் நிலுவையில் உள்ளன. மகப்பேறு விடுப்பு வழங்கப்படவில்லை. எனவே பணிவரன்முறை செய்யப்படாத தற்காலிக ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை உடனடியாக அமல்படுத்த அரசுக்குஉத்தரவிட வேண்டும்’’ என கோரி யிருந்தார்.

சமமாகப் பாவிக்க வேண்டும்

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜிமற்றும் நீதிபதி என்.கிருபாகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மகப்பேறு விடுப்பு வழங்குவதில் பெண் ஊழியர்கள் மத்தியில் எவ்வித பாகுபாடோ, பாரபட்சமோ காட்டக்கூடாது. பணி வரன்முறைப்படுத்தப்பட்ட மற்றும் பணி வரன்முறைப்படுத்தப்படாத பெண் ஊழியர்களை சமமாகப் பாவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x