Published : 13 Jul 2021 03:13 AM
Last Updated : 13 Jul 2021 03:13 AM

‘ரஜினி மக்கள் மன்றம்’ கலைப்பு அறிவிப்பால் ரசிகர்கள் எதிர்ப்பு - வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப் போவதில்லை : நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் திட்டவட்ட அறிவிப்பு

வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்றும், இதனால் ‘ரஜினி மக்கள் மன்றம்’ கலைக்கப்பட்டு முன்புபோல ரசிகர் நற்பணி மன்றமாக மட்டும் செயல்படும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்துள்ள ரசிகர்களில் ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்திருந்தார். கட்சிதொடங்கி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில்அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்தார். அதற்கான பணிகளில் ரஜினி மக்கள் மன்றம் மும்முரமாக ஈடுபட்டது.

இதனிடையே கடந்த ஆண்டு கரோனாதொற்று அதிகரித்த நிலையில், மருத்துவர்கள்ஆலோசனைப்படி தன்னால் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாது. அதனால் அரசியல் கட்சிதொடங்கி தனது ரசிகர்கள், ரஜினி மக்கள் மன்றத்தினரை பலிகடா ஆக்க விரும்பவில்லை. எனவே, அரசியல் கட்சி தொடங்க முடியாது என்று பேரவைத் தேர்தலுக்கு முன்பே ரஜினிகாந்த் அறிவித்தார். ரஜினி மக்கள் மன்றத்தினர் பலரும் அரசியலுக்கு வர வற்புறுத்தியபோதும் ‘தாம் அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை’ என்று ரஜினிகாந்த் திட்டவட்டமாக அறிவித்தார்.

இதையடுத்து ஹைதராபாத்தில் தான் நடிக்கும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்துகொண்டார். படப்பிடிப்புக் குழுவில் சிலருக்குகரோனா தொற்று ஏற்பட்டதால், படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றார்.

பின்னர், தனது வழக்கமான உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுவிட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நேற்று காலை ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக, “ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து பேசிய பிறகு அரசியல் வருகை தொடர்பாக தெரிவிக்கிறேன்” என்றுபோயஸ் தோட்ட இல்லத்தின் முன்பு செய்தியாளர்களிடம் கூறினார். அதையடுத்து ராகவேந்திரா மண்டபம் சென்று ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும், என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன? நிலை என்ன? என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது. அதை விளக்க வேண்டி யது என்னுடைய கடமை.

நான் கட்சி தொடங்கி, அரசியலில் ஈடுபட, ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ‘ரஜினி மக்கள் மன்ற’மாக மாற்றி மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் பல பதவிகளையும் பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம். காலச்சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப் போகும் எண்ணம் எனக்கில்லை. எனவே, ரஜினி மக்கள் மன்றத்தைக் கலைத்துவிட்டு சார் அணிகள் எதுவுமில்லாமல், இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக முன்புபோலரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ்நாடு, ஜெய்ஹிந்த்.

இவ்வாறு அறிக்கையில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நிர்வாகிகள் அதிருப்தி

இந்நிலையில் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட தென் தமிழக ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் சிலரிடம் ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

ரஜினியின் இந்த முடிவு அவரது ரசிகர்களாகிய எங்களிடம் கருத்து கேட்டு எடுக்கப்பட்ட முடிவு அல்ல. அவரது தனிப்பட்ட முடிவு.சுயநலத்தால் எடுக்கப்பட்ட முடிவாகவே இதை நாங்கள் கருதுகிறோம். ரஜினி மக்கள்மன்ற மாவட்ட நிர்வாகிகளாக செயல்பட்டு வந்த எங்களை பின்னோக்கிச் சென்று மீண்டும் ரசிகர் மன்ற மாவட்டச் செயலாளர்களாக பணிபுரியச் சொல்கிறார். இது வேடிக்கையாக இருக்கிறது.

அரசியலுக்கு வருகிறார் என்ற நோக்கத்தில் கடந்த 3 ஆண்டுகளாக தமிழகம் முழுக்கமாவட்டம் தோறும் ரஜினி மக்கள் மன்ற மகளிர் அணி, வழக்கறிஞர் அணி, இளைஞர்அணி, மருத்துவ அணியினர் என பலரையும் ஒன்று திரட்டி மக்கள் சேவையை மேற்கொண்டோம். அவரது தற்போதையை முடிவை கேட்டு களப்பணியாற்றிய ஒவ்வொரு நிர்வாகியும் வேதனையை பகிரத் தொடங்கியுள்ளனர்.

எம்.ஜி.ஆருக்கு பிறகு ரஜினிக்குத்தான் மகளிர் அணியினர் பலரும் தங்கள் முழு நேரத்தை மக்கள் மன்ற பணிக்காகச் செலவிட்டனர். தற்போதைய முடிவு மிகவும் வருத்தமாக உள்ளது. திரை வாழ்க்கையைத்தான் அவர் பிரதானமாக பார்க்கிறார். ரசிகர்களை பற்றி அவருக்கு துளியும் கவலையில்லை.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் சில மாவட்ட நிர்வாகிகள் கூறும்போது, ‘‘தமிழகத்தில் மிகப் பெரிய அரசியல்மாற்றம் நடக்கும் என்ற முறையில் ரஜினியுடன் பயணிக்கக் காத்திருந்தோம். அது இனி இல்லை எனும்போது, அவரது கருத்தை ஏற்று அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் கவனம் செலுத்த உள்ளோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x