Published : 03 Jul 2021 03:11 AM
Last Updated : 03 Jul 2021 03:11 AM

ஆண்டுகள் பல கடந்தாலும் கரையாத, நிலையான வளர்ச்சியுடன் - தன்னிகரற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் : மாநில வளர்ச்சி கொள்கைக் குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

ஆண்டுகள் பல கடந்தாலும் கரையாத, நிலையான வளர்ச்சியுடன் நாட்டிலேயே தன்னிகரற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும். பின்தங்கிய மாவட்டம் எதுவும் இருக்கக் கூடாது என்று மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் முதல் கூட்டத்தில் முதல்வர்மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

முதல்வர் தலைமையிலான மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவானது சமீபத்தில் திருத்தி அமைக்கப்பட்டது. குழுவின் துணைத்தலைவராக பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இக்குழுவின் முதல் கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று நடந்தது. இக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

அனைத்து பகுதியிலும் வளர்ச்சி

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளும் ஒரே சீராக மேம்பாடு அடைந்த பகுதிகளாக மாற வேண்டும். பின்தங்கிய சமூகம், பின்தங்கிய மக்கள் என்று யாரும் இருக்கக் கூடாது. 5 ஆண்டுகள், 10 ஆண்டுகள் ஆனாலும் கரையாத, நிலையான வளர்ச்சியை தமிழகம்அடைய வேண்டும். இதற்கான திட்டமிடுதல்கள் ஒவ்வொரு துறையிலும் தேவை. பொருளாதாரவளர்ச்சியும், சமூக நலத்திட்டங்களும் ஒன்றுக்கொன்று கைகொடுத்து செயல்பட்டதால்தான் தமிழகம் வளர்ச்சி அடைந்தது என்றுநோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியாசென் பாராட்டிஉள்ளார்.

தமிழகத்தின் வளர்ச்சி என்பது இறக்குமதி மட்டுமல்ல; நிதி மூலதனம் என்பதல்ல. வளர்ச்சி என்பது அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியாக இருக்க வேண்டும். மாநில வளர்ச்சி கொள்கைக் குழு, தமிழக அரசு செல்ல வேண்டிய பாதைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக திகழ வேண்டும். மாநிலத்தின் வளர்ச்சிக்கான நல்வழியைக் காட்ட வேண்டும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

முன்னதாக வரவேற்றுப் பேசியகுழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், குழுவின் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கினார்.

கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, மாநில வளர்ச்சி கொள்கைக் குழு உறுப்பினர்கள் ராமசீனுவாசன், ம.விஜயபாஸ்கர், சுல்தான் அகமதுஇஸ்மாயில், மு.தீனபந்து, எம்எல்ஏடி.ஆர்.பி.ராஜா, மல்லிகா சீனிவாசன், ஜோ.அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன், நர்த்தகி நடராஜ், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை செயலர் விக்ரம்கபூர், நிதித் துறை செயலர் ச.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x